வர்த்தமானியை நிறுத்தினால் தீர்வு வழங்குவதில் தாமதம் ஏற்படும் : காரணத்தை விளக்குகிறார் அமைச்சர் லால் காந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 21, 2025

வர்த்தமானியை நிறுத்தினால் தீர்வு வழங்குவதில் தாமதம் ஏற்படும் : காரணத்தை விளக்குகிறார் அமைச்சர் லால் காந்த

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு, கிழக்கில் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உரியவர்களுக்கு காணி உரித்துக்களை வழங்குவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றதே தவிர, அங்குள்ள காணிகளை எந்த வகையிலும் கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. வர்த்தமானியை நிறுத்தினால் வடக்கு மக்களுக்கு காணி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதிலேயே தாமதம் ஏற்படும் என விவசாயம், கால்நடைகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.

காணி தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்று தொடர்பாக கடந்த மே 8ஆம் திகதி இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் நிலையியல் கட்டளை 23/2 இன் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு செவ்வாய்க்கிழமை (20) பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறீதரன் எம்.பி தனது கேள்வியில், கடந்த மார்ச் 28ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை மையப்படுத்திய வகையில் அங்குள்ள பெருமளவான ஏக்கர் காணிகளை அளவீடு செய்யவும், அந்த காணிகளின் உரிமையாளர்களை பதிவு செய்யுமாறும் இல்லையேல் அந்த காணிகளை கையகப்படுத்துவது தொடர்பாகவும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதனை மீளப் பெறுவீர்களா? என்று கேட்டிருந்தார்.

இது தொடர்பில் அமைச்சர் லால்காந்த தொடர்ந்து பதிலளிக்கையில், காணிகளை கையகப்படுத்துவதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை. காணி தீர்வுக்கான திணைக்களத்தால் காணி தீர்த்தல் தொடர்பன வர்த்தமானியே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஒருபோதும் காணிகளை கையகப்படுத்துவதற்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு யுத்தம் காரணமாக காணி பிரச்சினைகள் ஏற்பட்டதால் அந்த காணிப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியிருந்தது.

குறிப்பாக மற்றைய மாகாணங்களில் நூறு வீதமும், 98 வீதமும் தீர்க்கப்பட்டுள்ள நிலையில் வடக்கில் 30.36 வீதமே தீர்க்கப்பட்டுள்ளது. கிழக்கில் 87.4 வீதமே தீர்க்கப்பட்டுள்ளது.

யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் சிலர் வெளிநாடு சென்றுள்ளதாலும், மேலும் சிலர் வேறு இடங்களில் இருப்பதால் ஆவணங்கள் காணாமல் போயிருக்கலாம்.

ஆனால் ஒருபோதும் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறவில்லை. தமக்கு முடிந்த வரையில் எந்த முறையிலாவது தமது காணிகளை உறுதிப்படுத்தக் கூடியவர்களுக்கு உரித்துக்களை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

பிரதமரின் தலைமையில் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இதன்போது நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஆராயவும் தயார்.

ஆனால் காணிகள் கையகப்படுத்தப்படாது. இது நாடு முழுவதும் முன்னெடுக்கும் சாதாரண செயற்பாடாகும். இது தொடர்பில் ஏற்பட்ட நெருக்கடிகளால் தீர்வு காண முடியாது போகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள். நீங்கள் இந்த வர்த்தமானியை நிறுத்தினால் வடக்கு மக்களுக்கு காணி பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதிலேயே தாமதம் ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment