இந்து சமுத்திரத்தின் பொருளாதார முதலீட்டு கேந்திர நிலையமாகும் இலங்கையின் எதிர்பார்ப்புக்கு சீனா பக்கபலமாக நிற்குமென சீனகம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் குஓ செசூ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்திருக்கின்றார்.
சீனத் தலைவர் சீ. ஜின்பிங் ஆரம்பித்திருக்கும் ‘ஒரு இலக்கு - ஒரு பாதை’ வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கையின் இந்த அபிலாஷைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படுவதாகவும் அவர் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனப் பிரதி அமைச்சர் நேற்று (02) வியாழக்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
இந்தச் சந்தப்பின்போது பிரதமர் தலைமை வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குமிடையில் பல தசாப்தங்களாக காணப்பட்டு வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் இருவரும் கருத்து பரிமாறிக்கொண்டனர்.
இலங்கைக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்தார்.
இரு தரப்புக்குமிடையில் இளைஞர்கள் பரிமாற்றத் திட்டத்தை முன்னெடுப்பதன் அவசியமும் இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment