பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேரின் கையொப்பத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் குணவர்தன உள்ளிட்ட எம்.பிக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியூடாகவே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும் இதனால் ஐ.ம.சு.முவுக்கு 70 உறுப்பினர்கள் உள்ளதனால் அவர்களில் ஒருவருக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென்றும் அவர்கள் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
பல கட்சிகளுக்கூடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பல குழுக்களாகவோ அல்லது தனியானதொரு குழுவாகவோ செயற்பட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றிரிருக்குமாயின் அக்கட்சியின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு என்ன? என்பதனை கேட்டறிவது சபாநாயகரின் பொறுப்பு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதுடன் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் கருத்தை அறிய அவருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இதே வேளை அடுத்த வாரம் 7 ஆம் திகதி இடம்பெறும் பாராளுமன்ற அமர்வின் போது இது தொடர்பில் சபாநாயகரின் இறுதி முடிவு அறிவிக்கப்பட இருப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரி ஒன்றிணைந்த எதிரணியினர் அன்றைய தினம் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறிய வருகிறது.
No comments:
Post a Comment