மாகாண சபைத் தேர்தல்களை புதிய கலப்பு முறையின் கீழ் நடத்துவதால் எந்தவொரு கட்சியின் பிரதிநிதித்துவமும் பாதிக்காது என்பதுடன், விகிதாசார அடிப்படையில் கட்சிகளுக்குக் கிடைக்கும் ஆசனங்களில் எவ்வித குறைவும் ஏற்படாது என தேர்தல் மறுசீரமைப்புத் தொடர்பாக ஆராய்ந்த சிவில் சமூகக் குழு வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு கட்சிக்கும் விசேட நன்மைகள் ஏற்படாது என்பதால் அரசியல் கட்சிகள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லையென அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்த சிவில் சமூகக் குழு இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது.
சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான பவ்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் பிரதிநிதிகள், ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுதந்த லியனகே, சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் கலாநிதி சுஜாதா கமகே உள்ளிட்ட துறைசார் வல்லுநர்களைக் கொண்ட சிவில் சமூகக் குழு கடந்த இரண்டரை மாதங்களாக கலந்துரையாடல்களை நடத்தி அறிக்கையொன்றை தயாரித்திருந்தது. அந்த அறிக்கையில் முக்கியமாக ஆறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
போனஸ் ஆசனங்களை வழங்குவது, ஸ்திரமான மாகாணசபை ஆட்சியை உறுதிப்படுத்துவது, பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்களை இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
சிவில் சமூகக் குழுவின் அறிக்கை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜயவர்த்தன பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் சுதந்த லியனகே கூறுகையில், 2017ஆம் ஆண்டு மாகாணசபைத் திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக 50 : 50 விகிதத்திலான கலப்புமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 50 வீதமானவர்கள் தொகுதி வாரியாகவும், 50 வீதமானவர்கள் பட்டியல் ஊடாகவும் நியமிக்கப்படுவர்.
50:50 விகிதத்திலான கலப்புமுறை எனக் கூறப்பட்டாலும் இது 100 வீதம் விகிதாசார முறையைக் கொண்டது என்பதால் எந்தவொரு கட்சிக்கும் கிடைக்கக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படாது. அவர்கள் கொண்டிருக்கும் வாக்கு விகிதாசாரத்தின் அடிப்படையில் ஆசனங்கள் கிடைக்கும்.
இதனை அடிப்படையில் பார்த்தால் புதிய கலப்புமுறையில் தேர்தலை நடத்தினாலும், பழைய முறையான விகிதாசார முறையில் தேர்தலை நடத்தினாலும் ஒரே மாதிரியான முடிவுகளே வரும். எந்தவொரு கட்சிக்கும் விசேட நன்மையோ அல்லது பாதிப்போ ஏற்படாது என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச்சட்டத்தில் சில சபைகளுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், மாகாணசபை தேர்தல் சட்டத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அல்லது ஆசனங்களின் எண்ணிக்கையை மாற்றுவதற்கான அதிகாரம் எவருக்கும் வழங்கப்படவில்லை.
இதனால் சகல மாகாண சபைகளிலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நிலையானதாக இருக்கும். எனவே, போனஸ் உறுப்பினர்கள் அல்லது தொங்கும் உறுப்பினர்கள் போன்ற பிரச்சினை ஏற்படாது. உறுப்பினர்களின் எண்ணிகையில் மாற்றம் ஏற்படாது. நல்லதொரு தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இந்த தேர்தல் முறையில் உள்ளது எனத் தெரிவித்தார்.
ஸ்திரமான ஆட்சியை அமைப்பது குறித்த விமர்சனங்களும் உள்ளன. உள்ளூராட்சி சபைகள் பலவற்றில் ஸ்திரமான ஆட்சியை அமைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. இதனால் தான் மாகாணசபைத் தேர்தல்களில் 50:50 கலப்புமுறையைவிட 60:40, 70:30 என்ற அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.
தொகுதிவாரி முறையை அதிகரித்தால் குழப்பங்களும் அதிகரிக்கலாம். எனவேதான் நாம் அதிக ஆசனங்களைப் பெறும் கட்சிக்கு வழங்கும் போனஸ் ஆசனங்களை அதிகரிக்குமாறு பரிந்துரைத்துள்ளோம். அதாவது 100 ஆசனங்களுக்கு அதிகமாகப் பெறும் கட்சிக்கு 5 போனஸ் ஆசனங்களையும், 100 ஆசனங்களுக்குக் குறைவாகப் பெறும் கட்சிகளுக்கு 4 போனஸ் ஆசனங்களையும் வழங்குமாறு பரிந்துரைத்துள்ளோம்.
அவ்வாறு வழங்குவதன் மூலம் ஸ்திரமான ஆட்சியை அமைக்கமுடியாது என்ற பிரச்சினையை இல்லாமல் செய்யலாம். உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றியீட்டிய கட்சிகளுக்கு பட்டியல் ஊடாக உறுப்பினர்களை நியமிக்க முடியாது போனது. எனினும் எமது பரிந்துரையின் கீழ் வெற்றியீட்டும் கட்சிகளுக்கும் போனஸ் ஆசனங்கள் வழங்குவது ஸ்திரமற்ற தன்மையை நீக்கும்.
மற்றையவிடயம் கட்சிகளின் செயலாளர்கள் அல்லது கட்சிகளின் தலைவர்களால் 50 வீதமான உறுப்பினர்களைப் பெயரிடுதல் தொடர்பானது. கட்சி செயலாளர்கள் பட்டியலுக்கு உறுப்பினர்களை பெயரிடும்போது பாரபட்சம் காண்பிப்பதாக விமர்சனம் உள்ளது.
இந்த சிக்கலைத் தவிர்க்கும் நோக்கில் 50 வீதமான பட்டியல் உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும்போது மூன்றில் ஒரு வீதமானவர்கள் போட்டியிட்டு சிறிய வித்தியாசத்தில் தோல்வியுற்றவர்களாக இருக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம்.
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வட்டாரமொன்றுக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் ஒரேயளவான வாக்குகளைப் பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் திருவுளச்சீட்டின் அடிப்படையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் தோல்வியுற்ற நபர் உறுப்பினர் பதவியைப் பெறுமுடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற அசௌகரியத்தைத் தவிர்க்கவே இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளோம்.
பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றி பேசப்படுகிறது. மாகாணசபைத் தேர்தலில் 25 வீதம் பெண்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களும் தொகுதிகளுக்குப் போட்டியிடுவதற்கு கட்சிகள் இடம்வழங்க வேண்டும். மாகாணசபை தேர்தல் சட்டத்துக்கு அமைய 1/6 வீதமான பெண் உறுப்பினர்கள் தொகுதிவாரியாக தெரிவுசெய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த எண்ணிக்கை 1/5 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். பெண்களை பட்டியலின் ஊடாக நியமிக்கும்போது பல்வேறு மோசடிகள் இடம்பெறுகின்றன. எனவே பட்டியல் ஊடாக பிரதிநிதிகளை தெரிவுசெய்யும்போது மூன்றில் ஒரு வீதமான பெண்களை கட்சியின் செயலாளர்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்பதையும் பரிந்துரைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
புதிய முறையானது முற்போக்கானது என்பதால் மோசடி நிறைந்த பழைய நிலைக்குச் செல்வது உசிதமாக இருக்காது. நாம் முன்வைத்திருக்கும் இந்தப் பரிந்துரைகளை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டு உரிய சட்டத்திருத்தங்களை இரண்டு மூன்று மாதங்களில் நிறைவேற்றினால் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் கூறினார்.
மாகாணசபை தேர்தல் திருத்தச்சட்டத்தை முழுமையாக வாசிக்காத சில அரசியல் கட்சிகள் தேவையற்ற அச்சம் கொண்டிருப்பதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகள் கோரிவருகின்றன.
No comments:
Post a Comment