வடக்கு, கிழக்கு உட்பட 13 மாவட்டங்களில் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவான நுண்கடன் பெற்ற 75 ஆயிரம் பெண்களின் கடன்கள் ஓகஸ்ட் மாதம் முதல் தள்ளுபடி செய்யப்படுகின்றன. கடன்தள்ளுபடி செய்யப்படும் பெண்கள் பற்றிய விபரங்கள் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் நுண்கடன் நிறுவனங்களிடம் பெற்றுக் கொண்ட ஒரு இலட்சம் ரூபாவுக்குக் குறைவான கடன்களே இவ்வாறு தள்ளுபடி செய்யப்படுகின்றன. 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை கடன்தொகையின் மூன்றுமாத கொடுப்பனவைச் செலுத்தாத 75,000 பெண்களின் கடன்களை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வதாக அமைச்சர் அறிவித்தார்.
நிதி அமைச்சில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், குருநாகல், புத்தளம், அநுராதபுரம் மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் நிதி நிறுவனங்களிடம் பெற்றுக் கொண்ட ஒரு இலட்சம் ரூபாவுக்குக் குறைவான நுண்கடன்களே ஓகஸ்ட் மாதம் முதல் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல பெண்கள் அதிக வட்டியைக் கொண்ட நிதி நிறுவனங்களிடமிருந்து நுண்கடன்களைப் பெற்றுள்ளனர். இந்தக் கடன்களை மீளச் செலுத்த முடியாது பெரும் அவஸ்தைகளை எதிர்கொண்டுள்ளனர். இவர்களில் ஒரு இலட்சம் ரூபாவுக்குக் குறைவாக கடன் பெற்று, கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி வரையில் மூன்று மாதங்கள் கடன் தவணைப் பணத்தை செலுத்த முடியாதவர்களின் கடன்தொகை இரத்துச் செய்யப்படும்.
இவர்கள் சார்பில் அரசாங்கம் எதிர்வரும் ஐந்து வருடங்களில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு அக்கடன்தொகையை செலுத்தும். பொதுமக்கள் சார்பில் அரசாங்கம் சுமார் ஒரு பில்லியன் ரூபாவை ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கடன்தள்ளுபடி செய்யப்படும் பெண்கள் பற்றிய பெயர் பட்டியல்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அவர்கள் கடன்பெற்றவர்களின் விபரங்கள் மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்தி நிதி அமைச்சுக்கு அனுப்பியவுடன் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். செப்டெம்பர் முதலாம் திகதியுடன் இந்த செயற்பாடுகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.
"முதற்தடவையாக அரசாங்கம் ஒன்று பொது மக்களின் சார்பில் அவர்களின் கடன்களை தாங்கிக்கொள்ள முன்வந்துள்ளது" என்றும் குறிப்பிட்டார்.
பெற்ற கடனுக்கான வட்டியை செலுத்த முடியாது வடக்கு, கிழக்கில் பல பெண்கள் எதிர்நோக்கிய பல்வேறு சிரமங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. சில இடங்களில் பாலியல் இலஞ்சம் பெற்றமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் ஆவாக் குழுவினர் கடன்பெற்ற பெண்களை மிரட்டி வட்டியை அறவிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான நிலைமைகளைக் கருத்தில் கொண்டே அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது எனவும் தெரிவித்தார்.
சில நிதி நிறுவனங்கள் 45 வீதம் முதல் 220 வீதம் வரையில் வட்டிகளை அறவிடுகின்றன. வட்டியைக் கட்டுப்படுத்த சட்ட ஏற்பாடுகள் இல்லை. இது தொடர்பில் நுண்கடன் வழங்குவோர் சங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். நுண்கடன்களுக்கான வட்டியை 35 வீதமாகப் பேணுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி நுண்கடன் நிறுவனங்களை கண்காணிப்பதற்கு அதிகாரசபையொன்றை நிறுவுவது பற்றியும், சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவை தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
உரிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்ட பின்னர் எதிர்காலத்தில் நுண்கடன்களால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதைத் தடுக்க முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஒரு கடனைச் செலுத்துவதற்காக மேலுமொரு கடன் பெற்ற சம்பவங்களும் இருக்கின்றன. அவ்வாறான சூழலில் எவ்வாறு கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். இதற்கு விளக்கமளித்த அமைச்சர், ஒன்றுக்கு மேற்பட்ட கடன்கள் பெற்றிருந்தால் ஆகக் கூடிய பெறுமதியைக் கொண்ட கடனே தள்ளுபடி செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment