பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான தொழில்நுட்ப உத்தியோகத்தர் சச்சித்ர மதுசங்க தேவதந்திரி மற்றும் அதன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியான நுவன் திலிண சல்காது ஆகியோர், இன்று (02) பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டனர்.
மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின்போது, பிழையான தகவல்கள் மற்றும் தொலைபேசி அழைப்பு ஒலி தட்டுகளில் மாற்றம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் இன்று (02) நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை இவ்வழக்கின் அரச தரப்பு சாட்சிகளாக முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர நீதிமன்றிற்கு தெரிவித்தார்.
இதனையடுத்து, குறித்த இருவரையும் ரூபா 3 இலட்சம் கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்குமாறு அறிவித்த நீதவான் அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்ததோடு, அவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
ஆயினும், அவர்களால் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், நாளை (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் (Perpetual Treasuries) நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன கடந்த பெப்ரவரி 04 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment