கல்முனை மாநகர சபை ஊழியர்களின் சத்தியாக்கிரக போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Friday, August 3, 2018

கல்முனை மாநகர சபை ஊழியர்களின் சத்தியாக்கிரக போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

கடந்த இரு நாட்களாக இடம்பெற்று வந்த கல்முனை மாநகர சபை தற்காலிக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் சத்தியாக்கிரக போராட்டம் நேற்று (02) மாலை ஆறு மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை அவசரமாக கூட்டப்பட்ட மாநகர சபையின் விசேட சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் அதனைத் தொடர்ந்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் தலைமையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுவார்த்தையின்போது வழங்கப்பட்ட உத்தரவாதங்களையும் ஏற்றுக் கொண்டே இவ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் சத்தியாக்கிரக போராட்டங்களைக் கைவிட முன்வந்துள்ளனர்.

நீண்ட காலமாக தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், கல்முனை மாநகர சபையில் புதிதாக பத்து பேருக்கு கிழக்கு மாகாண சபையினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தே அவர்கள் இப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் புதிய நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் இங்கு கடமையாற்றி வருகின்ற தற்காலிக ஊழியர்களுக்கே சேவை மூப்பு அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும் ஆளுநரைக் கோருவது என்று நேற்றைய விசேட சபை அமர்வில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதுடன் புதிய நபர்களை கடமையேற்க அனுமதிப்பதில்லை என்ற தீர்க்கமான உத்தரவாதமும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் இப்பிரச்சினை தொடர்வில் கல்முனை மாநகர முதல்வர் தலைமையிலான குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரை அவசரமாக சந்தித்து பேசுவது எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்பான முன்னரான செய்திகளை பார்வையிட
https://www.newsview.lk/2018/08/blog-post_44.html
https://www.newsview.lk/2018/07/blog-post_310.html

No comments:

Post a Comment