இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான எந்ததொரு சொத்தினையும் கொள்வனவு செய்யவோ குத்தகைக்கு எடுக்கவோ வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முயற்சிக்கக் கூடாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிரணியின் ‘ஜனபல சேனா’ அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து விஹார மகா தேவி பூங்காவில் நேற்று (02) (வியாழக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்பிலும் நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பது குறித்தும் அதிகம் கவனம் செலுத்துவோம்.
மேலும் தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கம், தேசிய அரச சொத்துக்களான துறைமுகம், மத்தள விமான நிலையம் போன்றவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானித்துள்ளது. குறித்த செயற்பாட்டுக்கு அரசாங்கத்திலுள்ள ஒரு குழு இணைந்து செயற்பட்டு வருகின்றது.
இதனால் அரசாங்கம் விற்பனை செய்ய முயல்கின்ற தேசிய சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வருவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் இவ்வரசாங்கம் சிறிய கார்களுக்கான இறக்குமதி வரியையும் அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு அரசாங்கம் சாதாரண மக்களின் நிலைமைகளை கண்டுகொள்ளாமல் செயற்படுவதுடன், வாழ்க்கைச் செலவையும் துரித வேகத்தில் அதிகரித்து செல்கிறது” எனத் தொிவித்தார்.
No comments:
Post a Comment