வவுனியாவில் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (02) இடம்பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவியுமான சந்திரிக்கா குமாரதுங்க அவர்களும் பங்கேற்று இருந்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஹனிபா தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்ட சந்திரிக்கா குமாரதுங்க, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்தும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள நல சமூக ஒருமைப்பாடு ஆகியவற்றினை மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் கிராமங்களில் வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், பெண் தலைமைத்துவ குடும்பங்களிடம் தனியார் நிறுவனங்கள் கடன் திட்டங்களை வழங்கி அங்கு பேசப்படும் பேரங்கள் மற்றும் மத்திய வங்கியின் கீழ் வரும் நிறுவனங்களை அவ்வாறான செயற்பாடுகளை கவனிப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதுடன், அவற்றினை தடை செய்வதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள், பட்டதாரிகளுக்கான கடன் திட்டங்கள், ஊடகவியலாளருக்pகான கடன் திட்டங்கள் மற்றும் புதிதாக செய்யப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் விபரங்களையும் மாவட்ட அதிகாரிகள் கேட்டு அறிந்து கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், வடமாகாண பிரதி அபிவிருத்தி அமைச்சர் கே.கே.மஸ்தான், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா மற்றும் பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், வங்கி முகாமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment