யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள கிராமங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியால் மீளக் கட்டியெழுப்பப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
“எழுச்சிபெறும் பொலன்னறுவை” செயற்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, புதூர் கனிஷ்ட வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (01) புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது 30 வருட கொடூர யுத்தத்தால் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள எல்லைக் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்தவகையில் புதூர் பிரதேசமும் மோசமாக பாதிக்கப்பட்டது. இவ்வாறான கிராமங்களை தனது ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கி பாரிய அபிவிருத்திப் பணிகளை செய்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த புதூர் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு இரண்ட மாடி வகுப்பறை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது போன்று, நீர் வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சின் ஊடாக பாரிய நீர் விநியோக திட்டமொன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான திட்டங்களின் ஊடாக இப்பிரதேசம் முன்னேற்றம் அடையும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இது போன்று தொடர்ந்தும் பாரிய அபிவிருத்திப் பணிகளை உங்களது பிரதேசங்களில் மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை பலப்படுத்த வேண்டும். அதன் ஊடாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மக்கள் முயற்சிக்க வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு – நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையும் இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. – என்றார்.
No comments:
Post a Comment