கனடா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளுக்குமான பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினராக வேலும் மயிலும் குகேந்திரன் செயற்படுவதைத் தடை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி பி.பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரால் இன்று (03) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேலும் மயிலும் குகேந்திரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை தடை உத்தரவை நீடிப்பதற்கும் நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.
அதற்கமைய இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த மனு மீதான எதிர்ப்புகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பிரதிவாதிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினரான வேலும் மயிலும் குகேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் நடராஜா லோகதயாளன் என்பவரால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment