தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தாது, தமிழ் மக்களுக்கான சுயாட்சியை தந்து, தாமே திறம்பட அபிவிருத்தி செய்ய அனுமதிக்க வேண்டுமென்பதுடன், பிராந்திய சுயாட்சியை உத்தரவாதப்படுத்த தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க முன்வர வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ஏற்பாட்டில், “இலங்கை முயற்சியாண்மை” தொடர்பான அரச வங்கிக்கடன் திட்டத்தினை ஆரம்பிக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று (02) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
ஓணூர் எனப்படும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் இந்த வகையிலேயே இலங்கை முயற்சியாண்மை என்ற செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
கடனுதவிகள், உபகரண உதவிகள் செய்து, நிபுணத்துவ ஆலோசனைகள் கொடுத்து தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதே “இலங்கை முயற்சியாண்மை” என்ற செயற்றிட்டத்தின் நோக்காக உள்ளது.
குறைந்த வட்டியில் தொழில் முனைவோருக்குக் கடன் கொடுத்து முன்னேறவும் நாடு முன்னேறவும் இந்த திட்டத்தினை முழுமையாக எமது மக்களுக்கு அறிவு புகட்டி அடையாளப்படுத்தி ஆரம்பித்து வைக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வருகை தந்துள்ளமை வரவேற்புக்குரியது.
ஒரு அண்மைய அரசியல்வாதி என்ற வகையில் சமூக சிந்தனையாளர் என்ற வகையில் ஒரு சில கருத்துக்களை அரசியல் ரீதியாகப் பகிர்ந்து கொள்ள எத்தணிக்கின்றேன்.
அண்மைக் காலங்களில் மக்களை வலுவூட்டுந் திட்டமொன்று எல்லா விதமான கல்வி முயற்சிகளிலும் விளையாட்டு முயற்சிகளிளும் தொழில் முயற்சிகளிளும் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.
அண்மையில், ஜனாதிபதியால் நடாத்தப்பட்ட் 48 பேர் கொண்ட கூட்டத்தில் மிக்க மனவருத்தத்துடன் கலந்து கொள்ளாது விட்டேன். ஜனாதிபதி எனக்கு மிகவும் வேண்டியவர். அவரின் மனதைப் புண்படுத்த எனக்கு எந்த விதத்திலும் விருப்பமில்லை. எங்களை நாங்களாக வாழ உதவி புரிய வேண்டும் என்பதே அரசியல் ரீதியாகத் ஜனாதிபதிக்கு என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்து
தெற்கின் முடிவுகளை வைத்து எம்மை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காதீர்கள் என்பதையே ஜனாதிபதிக்குச் சுட்டிக் காட்டினேன். முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜயதுங்க சிங்கள மக்கள் மரமென்றால் சிறுபான்மையோர் அதைச் சுற்றி வளரும் கொடி போன்றவர்களாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை தெரிவித்திருந்தார். அவரின் அந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். எம்மையும் சிறு மரங்களாக நாம் விரும்பும் விதத்தில் வாழ வழி வகுத்துத் தாருங்கள் என்பதே எமது கோரிக்கை.
எமக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆணை இடுவதை விட்டு கீழிருந்து நாம் செய்வதை உன்னிப்பாக கவனித்து எம்மை உயர்வடைய வைக்க அவர் ஆயத்தமாக இருக்க வேண்டுமென்பதே எமது ஆசை. ஒரு உயர்மட்ட அணுகுமுறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக எங்களுடைய உள்ளுர் நிறுவனங்கள் மற்றும் முயற்சிகளை ஊக்குவிக்க, ஒரு தாய் குழந்தையின் வளர்ச்சியைப் பார்த்துக்கொள்வது போன்று அம்மையார் இங்கு வந்திருப்பது மகிச்சியளிக்கின்றது.
No comments:
Post a Comment