இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு கெளசால் சில்வா தலைவராக தேர்வு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 25, 2018

இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு கெளசால் சில்வா தலைவராக தேர்வு

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்காவின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியுடன் இரண்டு முதல்தரப் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் ஜூலை 26ஆம் திகதி கட்டுநாயக்கவில் நடைபெறவுள்ள, முதல்தரப் போட்டியுடன் ஆரம்பிக்கின்றது. தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட இந்த முதல்தரப் போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் அணியினை வழிநடாத்த இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கெளசால் சில்வா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

32 வயதாகும் கெளசால் சில்வா, 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்த பின்னர் இதுவரையில் தேசிய கிரிக்கெட் அணியில் எந்தப் போட்டிகளுக்காகவும் விளையாடாமல் உள்ளார. எனினும், அண்மையில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் அவரினால் அபாரமான முறையில் 76 ஓட்டங்கள் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட அணியின் முன்னாள் தலைவரும் காலி றிச்மண்ட் கல்லுௗரியின் முன்னாள் வீரருமான சரித் அசலன்க, இந்த முதல்தரப் போட்டியில் இலங்கை இளையோர் அணியின் உப தலைவராக செயற்படவுள்ளதோடு பதும் நிஸ்ஸங்க, சம்மு அஷான் ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாக தமது தரப்பினை பலப்படுத்தவுள்ளனர். இதேநேரம், இரண்டு கைகளினாலும் பந்துவீசும் ஆற்றல் கொண்ட கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன ஆகியோருக்கு சகலதுறை வீரர்களாக தமது திறமைகளை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம், இந்த முதல்தரப் போட்டி மூலம் கிடைத்துள்ளது.

இதேநேரம், தேசிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு கமகே மற்றும் சுழல் பந்துவீச்சாளரான மலிந்த புஷ்பகுமார ஆகியோருக்கும் இந்த முதல்தரப் போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கையின் வளர்ந்துவரும் அணி (முதலாவது முதல்தரப் போட்டிக்கானது)

கெளசால் சில்வா (அணித்தலைவர்), மாதவ வர்ணபுர, பதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, சம்மு அஷான், கமிந்து மெண்டிஸ், மனோஜ் சரத்சந்திர, சாமிக்க கருணாரத்ன, லஹிரு கமகே, திலேஷ் குணரத்ன, மலிந்த புஷ்பகுமார, மேலதிக வீரர்கள் – ஹாசித்த போயகொட, நிசல தாரக்க.

No comments:

Post a Comment