பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு ஏதேனும் நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் சகல கட்சிகளின் தலைவர்களும் தனிப்பட்ட ரீதியிலேயே தீர்மானங்களை எடுக்கின்றனர். மக்களைக் கேட்காமல் தமது விருப்பங்களுக்கு அமைய முடிவுகளை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண முதலமைச்சரால் வாரத்துக்கொரு கேள்விக்கு வழங்கப்படும் பதிலிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்விக்கே அவர் மேற்கண்ட பதிலை வழங்கியுள்ளார்.
பெரும்பான்மை அரசியல் தலைவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் தான் இன்றைய அரசியல் அரங்கத்தில் சிறுபான்மையினருக்குக் கிடைக்கும் வரப்பிரசாதம். அதனை உரியவாறு பாவிக்க நாம் முன்வர வேண்டும். அத்துடன் இவ்வாறான சந்தர்ப்பங்கள் எழும் போது வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒவ்வொரு கட்சியையும் கவனித்துள்ளேன். அவற்றின் தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் தான் இவ்வாறான விடயங்களைக் கையாளுகின்றார்கள். மக்களைக் கேட்பதில்லை. ரணிலுக்கு எதிரான ஐ.தே.க உறுப்பினர்கள் தற்போது அவருடன் திரும்பவும் ஒன்று சேர ஒத்துக் கொண்டுள்ளார்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதோ நன்மைகள் இணங்கப்பட்டுள்ளது என்று தானே அர்த்தம். இந்தக் கொடுப்பனவுகள் தனிப்பட்டவாறான நன்மையா அல்லது மக்கள் சார்பான கோரிக்கைகளுக்கு ஈந்த கொடுப்பனவுகளா என்பது பற்றி வெளிப்படைத் தன்மை இருப்பதில்லை.
நாம் எடுக்கும் தீர்மானங்களுக்கு தகுந்த காரணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க எமக்குத் திராணி இருக்க வேண்டும். ஓரிருவர் தமக்குள் குசு குசுத்து விட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படாது.
யார் சார்பில் நடந்து கொண்டாலும் எழுத்து மூல உடன்பாடு ஒன்று இருக்க வேண்டும். அதன் பின்னரே எமது ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment