கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வும், மாநகர முதல்வர் தெரிவும் நாளை 02.04.2018ம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதில் எத்தரப்பினர் ஆட்சியமைப்பதென்பதில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதிலும், தனியான உள்ளூராட்சி மன்றத்தை முன்னிலைப்படுத்திய சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினர் இந்த முதல் அமர்வில் கலந்து கொள்வது சாதகமானதா? அல்லது பாதகமானதா? என்கின்ற ஒரு கேள்வியை இங்கு எழுப்பியிருக்கின்றது.
12 ஆசனங்களை ஐக்கிய தேசியக்கட்சி பெற்றிருக்கின்றது. இதில் வெற்றி பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மொத்தம் 10 பேராவர். இவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களின் ஆட்சி அமைய வேண்டிய தேவை இங்கிருக்கின்றது.
அதே நேரம், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு -07, தமிழர் விடுதலைக்கூட்டணி -03 ஐ.தே.க சார்ந்த -02 சுயேட்சைக்குழு ஒரு உறுப்பினர் உட்பட 13 தமிழ் பிரதிநிதித்துவங்கள் இங்குள்ளது.
ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 09 பேரும் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லையென்கின்ற அடிப்படையில் அவர்கள் முதல் அமர்வில் கலந்து கொண்டால் ஒரு சங்கடமான நிலைக்குத் தள்ளப்படக்கூடும்.
எவ்வாறெனில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருவரை மேயராக நிறுத்துகின்ற அதே நேரம், தமிழர் தேசியக்கூட்டமைப்பும் இன்னுமொருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம்.
அந்நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ந்த 05 முஸ்லிம் உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளரை ஆதரித்தார்களேயானால் முஸ்லிம் முதல்வர் தெரிவாகுவது இலகுவாக அமைய முடியும்.
அவ்வாறில்லாமல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்குமிடையே இருக்கின்ற அரசியல் போட்டித்தன்மையின் காரணமாக சில வேளை, அவர்களும் ஒருவரை தமது கட்சி சார்பில் முதல்வராக முன்னிறுத்தலாம்.
அப்படி முன்னிறுத்துவதென்பது சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவின் 09 உறுப்பினர்களைக் கருத்திற்கொண்டே பிரேரிக்கக்கூடிய வாய்ப்புத்தோன்றும். இத்தகைய இக்கட்டான நிலையைத் தோற்றுவிப்பதிலிருந்து விலகுவதற்கும் மு.கா.வும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து முஸ்லிம் ஆட்சியை நிலைப்படுத்துவதற்கு இருக்கின்ற சரியான ஒரு தெரிவு சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினர்கள் இந்த முதல் அமர்வைப் பகிஷ்கரிப்பதேயாகும்.
இங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ந்த ஒரு உறுப்பினரை பிரதி முதல்வராகவும், வேறொருவருக்கு மாநகர சபையின் நிலையியல் குழுவில் பிரதிநிதித்துவமும் மற்றும் மருதமுனை சார்ந்த சுயேட்சைக்குழு பிரதிநிதிக்கு நிலையியல் குழுக்களில் அங்கத்துவத்தை வழங்கியும் மொத்தமாக 16 முஸ்லிம் உறுப்பினர்கள் இணைந்து ஆட்சியமைக்க முடியும்.
சில வேளை, தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளும் தலா ஒவ்வொருவராக மூன்று பேரும் மு.கா.வின் முஸ்லிம் முதல்வர் வேட்பாளரை ஆதரித்து தமது வாக்குகளைப் பிரயோகிப்பார்கள் அல்லது வாக்களிப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்வர்.
தேவையேற்படின், இம்மூன்று உறுப்பினர்களுக்கும் கூட மாநகர சபை நிலையியல் குழுக்களில் அங்கத்துவ அந்தஸ்த்தை வழங்கியும் இணைத்துக்கொள்ள முடியும். அரசியல் போட்டித்தன்மை காரணமாக இம்மூன்று பேரும் முஸ்லிம் தரப்பு முதல்வரை ஆதரித்துக் கொள்ளாவிட்டாலும், சமூக உணர்வின் அடிப்படையில் தமிழ் முதல்வரைத் தெரிந்து கொள்வதற்கு வாக்களிக்கத் துணியமாட்டாகள் என்ற நம்பிக்கையை அவர்கள் மீது நாம் வைக்கலாம்.
சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவினர்கள் சமூகமளித்து வாக்களிப்பில் கலந்து கொள்ளாது தவிர்த்துக் கொண்டாலும், அவர்களின் அச்செயற்பாட்டை பிழையானதென காண்பிப்பதற்காக வேறு எத்தனங்கள் அங்கு முன்னெடுக்கப்படலாம்.
அந்த நேரத்தில், இவர்கள் ஒரு தடுமாற்ற நிலையை அடைந்து வாக்களிக்க வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்படுமானால், இவர்களது தேர்தல் காலக்கோஷங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகி விடும்.
ஏனெனில், சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை அமைவதற்கு எத்தரப்பினர்களின் வாக்குறுதிகளையும் நம்பக்கூடிய எந்தச்சூழலும் இன்று வரை இல்லாததன் காரணமாகவும், இந்த அமர்வுக்கு முன்னர் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்துக்குரிய பிரகடனத்துக்கான எந்த முகாந்திரமும் இல்லையென்பதினாலும், இக்குழுவினர்கள் வாக்களிப்பிலிருந்து விலகியே இருக்க வேண்டியதன் கட்டாயம் இருப்பதினால் முதல் அமர்வை பகிஷ்கரிப்பதுவே தமது எண்ணத்திற்கும், நோக்கத்திற்கும் இன்றும் நாளையும் பாதுகாப்பு அரணாக அமைய முடியும்.
முதல் அமர்வுக்குச் சென்று தவறிழைத்தால், அது எந்தச்சூழலிலும் நிவர்த்திக்க முடியாததும், தீராத பழியையும் சுமக்க வேண்டிய வரலாற்றுத் தவறுக்குட்படுத்துமென்பதை நமது அவதானத்திலிருந்து விலத்தி விட முடியாது.
சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவினரின் பங்குபற்றுதல் சில வேளை கோரத்தை, கூட்ட நடப்பெண்ணை பூர்த்தியாக்கி விடும். இதிலிருந்தும் நாம் ஒதுங்குவதற்கும் ஒரே வழி முதல் அமர்வைப் பகிஷ்கரிப்பதேயாகும்.
எம்.எம்.எம்.நூறுல்ஹக்
சாய்ந்தமருது - 05
No comments:
Post a Comment