பாகனை தாக்கிய யானைகள் பற்றி நாம் நிறையக் கேள்விப் பட்டிருக்கின்றோம். யானைகளுக்கு மதம் பிடிப்பதும் பாகனை மட்டுமன்றி அப்பாவிகளையும் தாக்குவதும் உலக வழக்கம் தான். இலங்கையில் பல தடவை யானைகள் தாக்கி அதன் பாகன்கள் உயிரிழந்திருக்கின்றனர். அண்மையிலும் கூட ஊட்டி வளர்த்த மதகுரு ஒருவரை ஒரு யானை தாக்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனவே, இங்கு யானை அடங்கி நடப்பதென்பது அதை வளர்ப்பவரின் அன்பிலோ, பாகனின் அதிகாரத்திலோ அல்லது அங்குசத்தின் பயத்திலோ அல்ல என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அடங்கி நடக்க வேண்டுமா? அடித்துப்போட வேண்டுமா? என்பதை தீர்மானிப்பது யானையின் உள்ளார்ந்த மனநிலையேயன்றி பாகனின் வித்தைகளல்ல என்பது தான் யதார்த்தமாகும். இந்தப்புரிதலுடனேயே தற்கால இலங்கை அரசியலை நோக்க வேண்டியிருக்கின்றது.
அந்த வகையில், இக்கட்டுரையில் ‘யானை’ எனக்குறிப்பிடப்படுவது ஐ.தே.கட்சியை மட்டுமல்ல என்பதையும் அந்தந்த காலத்தில் கோலோச்சுகின்ற பெருந்தேசியக் கட்சிகளான ஐ.தே.க.வையும் சு.க.வையும் பொதுவாகவே குறிப்பிடுகின்றதென்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
யதார்த்தத்தைப் புரிதல்
அந்த வகையில், பெருந்தேசியக் கட்சிகளுக்கு நாங்களே பாகன்களாக இருக்கின்றோம். நாங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள், அவர்களது அங்குசம் எங்களிடத்திலுள்ளது. மைத்திரி பால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ என எல்லோருடைய பிடியும் எம்மிடமே இருக்கின்றதென்று முஸ்லிம் அரசியல்வாதிகள் கதைகள் பல கூறினாலும், யதார்த்தமென்பது வேறு விதமானது.
ஒரு தமிழ்த்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு பெரிய வீரன் போல் வீட்டுக்குள் நுழைந்து அங்கே கடுமையாக அடிவாங்கி விட்டு வெளியில் வந்து, உள்ளே தானே போட்டுத் தாக்கியதாக கதையளக்கின்ற பாணியில் அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அதிகம் பேருள்ளனர்.
யானைகள் அடித்து விடுமென அடங்கியிருப்பவர்களும் ‘கை’ அமுக்கி விட்டாவது காரியத்தைச் சாதிக்கின்றவர்களும் இருக்கின்றனர். அதே வேளை, நானும் ரவுடி தான் என்பது போல, நானும் பெரிய தலைவன், பெரிய அரசியல்வாதி என சுயபிரகடனம் செய்து கொண்டு திரிவோரும் உள்ளனர்.
ஆனால், முஸ்லிம் அரசியல்வாதிகள் வைத்துக் கொண்டிருக்கின்ற அங்குசம் அல்லது கட்டுப்படுத்தும் கருவி பலமற்றதென்பது வெள்ளிடை மலை. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், அதில் அமைச்சு, அரை அமைச்சு, தேசியப்பட்டியல் எம்..பி பதவிகளைப் பெற்று ஆட்சியில் சங்கமமாகி விடுவதாலும் அதனூடாக பல வரப்பிரசாதங்களை அனுபவிப்பதாலும், கிட்டத்தட்ட ‘நக்குண்டார் நாவிழந்தார்’ என்ற நிலைக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் வந்து விடுகின்றனர்.
இப்பதவிகளை ஒரு கடிவாளமாக வைத்துக் கொண்டும் உரிய நேரத்தில் தீனி போட்டுக் கொண்டும் ஆட்சியாளர்களும் பெருந்தேசியக் கட்சிகளும் முஸ்லிம்களின் அரசியலை ஆட்டிப் படைக்கின்றதே தவிர, நாங்கள் தான் அரசாங்கத்தைக்கட்டி ஆள்கின்றோம் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுவது போல் ஒன்றுமில்லை.
தமிழரின் முன்மாதிரி
இப்பண்பை தமிழர் அரசியலில் காண முடியாது. இரா. சம்பந்தன் நினைத்தால் இந்நாட்டின் பிரதமர் கதிரையைக் கேட்க முடியும். அமைச்சுக்களையும் இன்னபிற வரப்பிரசாதங்களையும் கோர முடியும்.
ஆனால், தமிழர் அரசியலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யவில்லையென்பது ஒரு புறமிருக்க, அவர்கள் குறிப்பிடத்தக்க எப்பதவிகளையும் பெறவில்லை. ஆதலால், ‘இவர்கள் பதவிக்கு ஆசைப்படாதவனுகள். நினைத்தால் எதனையும் செய்வானுகள்’ என்ற உள்ளச்சம் பெருந்தேசியத்திற்கு இருப்பதாகச் சொல்ல முடியும்.
எனவே, அவர்களது உரிமைக் கோரிக்கைகள், ஜனநாயகப் போராட்டங்கள் ஒப்பீட்டளவில் வெற்றியடைந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள் விடயத்தில் அவ்வாறான முயற்சிகள் கூட சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை.
முஸ்லிம் கட்சித்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது ஆடைக்கொரு தடவை கோடைக்கு ஒரு தடவை பாராளுமன்றத்தில் பேசினாலும் கூட, முஸ்லிம் மக்களின் அரசியலில் ஒரு ‘அனுரகுமார திசாயக்க’ இல்லையென்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.
இதற்கு முஸ்லிம் மக்களும் முக்கிய காரணமாகும். ஒன்றுக்கும் உதவாத அரசியல்வாதிகளை, அவர்களின் தவறுகளையெல்லாம் சரி கண்டு தலைவர்கள் எனக்கொண்டாடுவதும் சண்டியர்களையும், மது மற்றும் மாது பழக்கமுள்ளவர்களையும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் வாக்களித்து, உள்ளூராட்சி சபை தொடக்கம் பாராளுமன்றம் வரை அனுப்புவதும், பணமும் பதவியும் இருப்பவன் தான் நல்ல அரசியல்வாதி என நினைத்து அவர்களுக்குப் பின்னால் போவதும் முஸ்லிம் மகாஜனங்களின் தவறு தானே. முஸ்லிம் சமூகத்தைத்தவிர வேறெந்த சமூகத்திலும் குறிப்பாக, தமிழர்களிடையே இக்கலாசாரத்தைக்காண முடியாது.
எனவே, தலைவர்கள் எவ்வழியோ மக்கள் அவ்வழியே என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. மக்கள் எப்படி பணத்துக்கும் பதவிக்கும் அபிவிருத்தி மாயைக்கும் பின்னால் போகின்றார்களோ, எவ்வாறு பணத்துக்காக தமது வாக்குகளை தாரைவார்க்கத் தயாராக இருக்கின்ற முஸ்லிம்கள் சிலரும் நம்மிடையே இருக்கின்றார்களோ, அதே வியாபாரத்தைத்தான் மொத்த வியாபாரமாக முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை கோபப்படாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தலைவர்களைக் குற்றஞ்சொல்வதற்கான அருகதை முஸ்லிம்களுக்கு இருக்கின்றதா? என்பதை ஒவ்வொரு பொது மகனும் சுயவிசாரணை செய்து கொள்ள வேண்டும். தலைவன் தறி கெட்டவன் என்றாலும், தளபதி தரங்கெட்டவன் என்றாலும் கட்சிக்காகவும் முகஸ்துதிக்காகவும் வெறும் மாயைகளுக்காகவும் ஏன் பாட்டுக்காகவும் வாக்களித்து அவர்களை உள்ளூராட்சி சபைக்கும், மாகாண சபைக்கும், பாராளுமன்றத்திற்கும் மீண்டும் மீண்டும் அனுப்பியது நாம் தானே. எனவே, நாம் சரியான தெரிவை மேற்கொள்ளாது, அவர்கள் எவ்வாறு சரியாகச் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமென்று விளங்கவில்லை.
சரியும் செல்வாக்கு
இவ்வாறு தான், எல்லா அரசியல்வாதிகளும் (பாகன்களும்) ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு அரசாங்கத்துடன் அல்லது ஒரு பெருந்தேசியக் கட்சியுடன் தேனிலவு கொண்டாடுவதும், பின்னர் ஊடல் கொள்வதுமாக காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அந்த அடிப்படையில் இலங்கை அரசியலின் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் அண்மைக்காலமாக பெருந்தேசியக் கட்சிகளுடனான உறவில் மனமுறிவை, அதிருப்தியைச் சந்தித்துள்ளதாகவே தோன்றுகின்றது.
இதில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் உளக்கிடக்கைகளை வெளியில் சொல்கின்றனர். வேறு சிலர் உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம் கட்சித்தலைவர்களான றவூப் ஹக்கீமும் றிசாட்டும் மட்டுமன்றி, அதாவுல்லாவும் கூட அவர்கள் சார்ந்த பெருந்தேசியக் கட்சியோடு பெரும் செல்வாக்குடனில்லை. தம்மால் செல்வாக்குச் செலுத்த முடியாத அல்லது தமக்குரிய மரியாதை கிடைக்காத சந்தர்ப்பங்களில் அவர்கள் மனமுடைந்து போகின்றனர்.
இந்நிலை உச்சமடைந்தால் அறிக்கைகளையும், எச்சரிக்கை விடுத்தல்களையும் காணக்கூடியதாக இருக்கும். சில போதுகளின் மாற்றுக்கட்சியுடன் உறவு துளிர்க்கத் தொடங்குவதுமுண்டு.
முட்டுக்கொடுக்கும் பலம்
முஸ்லிம் அரசியல்வாதிகளின் முட்டுக்கொடுக்கும் பலமும் முஸ்லிம் மக்களின் ஆதரவும் சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியமென்றாலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோர் பற்றியும் ஆட்சியாளர்களிடமும் அக்கட்சிகளின் முக்கியஸ்தர்களிடமும் ஒரு மதிப்பீடிருக்கின்றது. யார் எப்படிப்பட்டவர் என்பதும் யாருக்கு எதைக் கொடுத்தால் அடங்குவார்கள் என்பதையும் நன்கறிந்து வைத்துள்ளனர்.
அத்துடன், எந்தப் பெரிய முஸ்லிம் அரசியல்வாதி என்றாலும், அவர்களுக்கு என்றொரு அதிகார எல்லை இருக்கின்றது. அதற்கப்பால் செல்ல முடியாதென்பதே யதார்த்தமாகும். இவற்றையெல்லாம் ‘நலன்களின் மோதலே’ (Conflict of Interests) தீர்மானிக்கின்றது.
தற்போது ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனும் பழைய அன்பிலில்லை என்பது உன்னிப்பாக நோக்கும் போது தெரிகின்றது.
நாட்டின் அரசியல் நிலை, கடந்த உள்ளூராட்சித்தேர்தல், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்தல் மற்றும் அம்பாறை, திகண கலவரங்கள் என்பவற்றிற்குப்பிறகு இந்த ஊடல் விரிசலடைந்து செல்வதாகத் தோன்றுகின்றது.
றிசாட்டின் நிலை
நல்லாட்சியை நிறுவுவதற்காக முதன் முதலில் களத்தில் குதித்த முஸ்லிம் கட்சித்தலைவர் என்ற இடம் றிசாட் பதியுதீனுக்கு இருந்தாலும், ஐ.தே.கட்சியின் நலனா? மக்கள் காங்கிரஸின் நலனா? முன்னுரிமைக்குரியதென்ற ‘நலன்களின் மோதல்’ சார்ந்த தெரிவை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்படும் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிள்ளுக்கீரையாகப் பயன்படுத்தப்படுவதைக் காண முடிகின்றது.
இதற்கு நல்ல உதாரணம் கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் ஐ.தே.கவும் மக்கள் காங்கிரஸும் சேர்ந்தா? அல்லது இணைந்தா போட்டியிடுவதென்பதைத் தீர்மானிப்பதற்காக றிசாட் பதியுதீன் ஒரே நாளில் மூன்று தடவை ஸ்ரீகொத்தாவுக்கு அழைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு, கடைசியில் ஏமாற்றப்பட்டார்.
இவ்வாறு இன்னும் பல நிகழ்வுகள் நடந்திருப்பதாகத்தகவல். இதனடிப்படையில், ஐ.தே.க.வின் உச்சக்கட்ட ஏமாற்று வித்தையை றிசாட் உணர்ந்து கொண்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் இத்தேர்தலில் சில இடங்களில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் மக்கள் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டாலும், தனியே மயில் சின்னத்தில் போட்டியிட்ட இடங்களில் ஆட்சியமைப்பதற்காக அங்கு யானையில் போட்டியிட்ட (முஸ்லிம் காங்கிரஸ்) அணியினருக்கு றிசாட் தரப்பு ஆதரவளிக்கவில்லை. அல்லது மக்கள் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஐ.தே.க.வின் ஆதரவை சில சபைகளில் கோரவேயில்லை.
ஆனால், அந்த சபைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒத்துழைப்புடன் கூட்டாட்சியை நிறுவும் முயற்சியில் மக்கள் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளமை கவனிப்பிற்குரியது. அம்பாறை மாவட்டத்தில் 3 சபைகளில் சு.க.வுடன் இணைந்து ஆட்சியமைத்தமை இன்னும் ஓரிரு சபைகள் குறித்து பேச்சுக்கள் இடம்பெறுகின்றமை இதற்கு நல்ல எடுத்துக் காட்டுகளாகும்.
எனவே, ஐக்கிய தேசியக்கட்சியின் எல்லா வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், மக்கள் காங்கிரஸ் தலைவர், ஐ.தே.க.வுடன் பழைய உறவிலிருப்பதாகக் கருத முடியாது.
ஏதாவது நடந்தால் தமது கட்சியின் நலனை உறுதி செய்வதற்கான அடுத்த தெரிவு குறித்து அவர் சிந்திப்பதாகச் சொல்ல முடியும். ஆனால், றிசாட் ஐக்கிய தேசியக் கட்சிக்கெதிராக காட்டமான எந்த அறிக்கையையும் இதுவரை பொதுத்தளத்தில் வெளிப்படுத்தியிருக்கவில்லை.
ஹக்கீமின் அறிக்கை
ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் ஐக்கிய தேசியக்கட்சிக்கெதிராக பகிரங்கமாகவே பேசத் தொடங்கி விட்டதைக்காண முடிகின்றது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஹக்கீம் செல்லப்பிள்ளை என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். அந்தளவுக்கு நெருக்கமானவர் மு.கா. தலைவர்.
கடந்த தேர்தல் காலத்தில் பிரசார மேடையொன்றில் உரையாற்றிய றவூப் ஹக்கீம், “நாங்கள் யானையைக் கட்டுப்படுத்தும் பாகன்களாவே ஐ.தே.கவுடன் இணைந்திருக்கின்றோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் அம்பாறை வன்முறையையடுத்து ஒலுவிலுக்கு வந்திருந்த பிரதமர் பாதிக்கப்பட்ட அம்பாறைக்கு செல்லாமல் அப்படியே புறப்பட்டுப் போனார். இது குறித்து கவலை வெளியிட்ட பிரதியமைச்சரும் மு.கா.வின் பிரதித்தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ், “பிரதமர் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வராமல் திரும்பிப் போனமை, அவர் ஒரு தைரியமற்றவர் என்பதை எடுத்துக் காட்டுகின்றது” என்று காட்டமான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இக்கருத்து தலைவர் ஹக்கீமை சந்தோசப்படுத்தவில்லை.
அதன் பிறகு திகண கலவரத்தையடுத்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹரீஸ், கடும் தொனியில் அரசாங்கத்தையும் பிரதமரையும் சாடும் விதமாக ஆக்ரோஷமான கருத்துக்களை முன்வைத்தார்.
இதனால், மு.கா. தலைவர் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் – ஹரீஸ் மீது கடும் கடுப்பிலிருப்பதாகவும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் சிந்திப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
என்னடா இது, கட்சிக்குள் ஒழுக்கம் பற்றி கேள்வி எழுப்பப்பட வேண்டிய எத்தனையோ சங்கதிகள் இருக்கத்தக்கதாக, சமூகத்திற்காக பேசிய ஒருவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கையா? என்று கடுமையான விமர்சனங்கள் சமூகத்தளத்திலிருந்து மேலெழுந்தன.
அதனாலோ என்னவோ ஒழுக்காற்று நடவடிக்கை கதை ஓய்ந்து போனது. ஆனாலும், அடுத்ததாக கட்சியிலிருந்து ஒருவர் வெட்டி வீழ்த்தப்படுவார் என்றால், அது பிரதியமைச்சர் ஹரீஸாக தான் இருக்குமென்பதை கட்சிக்குள்ளேயே பேசிக் கொள்கின்றார்.
இப்பேர்ப்பட்ட ஐ.தே.க. விசுவாசியான மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமே இப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் பயணிக்க முடியாதென்ற தொனியில் கருத்து வெளியிடுகின்றார். யானைப்பாகன் என்று கூறியவரை இன்று யானை தன்னை அடித்து வீழ்த்தியுள்ளது அல்லது தன்னைக் கணக்கிலெடுக்கவில்லை என்பது அவரது உரைகளில் தொனிக்கின்றது.
ஹக்கீம் ஏன் இவ்வாறு பேசுகின்றார் என்பதை அரசியல் ஆய்வாளர்கள் பலரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். வழக்கமான நாடகம் தான் இதுவெனவும், அரசாங்கத்தை அச்சுறுத்தி அதன் மூலம் எதையாவது பெற்றுக் கொள்ளும் உத்தியெனவும் ஊகங்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமன்றி, இந்த முறை சில உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதில் ஐ.தே.கட்சியின் (மக்கள் காங்கிரஸ்) ஆதரவை மு.கா.வினால் பெற முடியாமல் போயிருக்கின்றது. புத்தளத்தில் சு.க. ஆதரவளித்தாலும் அம்பாறை மாவட்டத்தில் ஹக்கீமின் வேண்டுதல்களை சு.க. புறக்கணித்து, மக்கள் காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளது.
இந்நிலையில், இத்தனை காலமும் மஹிந்த ராஜபக்ஷவை வசைபாடி வந்த ஹக்கீம் தலைமையிலான மு.கா., அட்டாளைச்சேனையிலும் புத்தளத்திலும் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டாட்சியை நிறுவியிருக்கின்றதென்பது கவனிப்பிற்குரியது.
எது எப்படியே யானையின் பாகன் போல் தம்மை நினைத்துக் கொண்டிந்த ஹக்கீம் மற்றும் றிசாட் தலைமையிலான இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ஐ.தே.க.விலிருந்து விலகி, மக்கள் காங்கிரஸ் சு.க.வையும் முஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவையும் நோக்கி நகரத்தொடங்கியிருப்பதாகவே தெரிகின்றது.
இதே வேளை, ஐ.தே.க.விலிருந்து வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு கட்சி தாவுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஓரிருவர் தயார் நிலையிலிருப்பதாகவும் ஒருவேளை அதைக்கொடுத்து அவர்கள் ஐ.தே.க.விலேயே தொடர்ந்தும் வைத்திருக்கப்படலாம் என்றும் ஊர்ஜிதமற்ற தகவலொன்றும் கசிந்துள்ளது.
அதாவுல்லாவின் வகிபாகம்
மறுபுறத்தில், முன்னர் மஹிந்தவின் விசுவாசியாகவும் இப்போது சு.க.வின் கூட்டாளியாகவும் இருக்கின்ற அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே ஐ.தே.க.வில் இடமில்லை.
இடம் கிடைத்தாலும் அதாவுல்லா பிரதமர் ரணிலோடு பயணிக்க மாட்டார். சுதந்திரக் கட்சிக்குள் அதாவுல்லாவுக்கு ஒரு தனியிடம் இருந்தாலும் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும், சு.க. என்கின்ற யானையை ஆட்டுவிப்பதில் நடைமுறைச்சிக்கல் இருப்பதையும் சாடைமாடையாகக் காண முடிகின்றது.
குறிப்பாக, கடந்த தேர்தலில் சு.க.வுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்துவதில் சிக்கல்கள், வெட்டுக்குத்துக்கள் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. அதே போல், அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸுடன் சேர்வதற்கு சு.க. எடுத்த முடிவில் செல்வாக்குச் செலுத்த அதாவுல்லாவால் முடியவில்லை அல்லது அதை அவர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.
அத்துடன், மஹிந்தவிடம் சொல்லி அட்டாளைச்சேனையின் மொட்டு வேட்பாளரை தம்பக்கம் ஆதரவு வழங்கச்செய்வதும் சாத்தியப்படவில்லையென்றே கருத வேண்டியுள்ளது. ஒரு வேளை, றிசாட்டும் ஹக்கீமும் சு.க.வை நெருங்கி வந்தால் அதாவுல்லாவின் செல்வாக்கு சு.க.வுக்குள் இறங்குமுகமாக இருப்பதற்கு நிறையவே வாய்ப்புள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிம் கட்சித்தலைவர்களின் செல்வாக்கு மட்டுமன்றி, பெருந்தேசியக் கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் எம்.பி.க்களின் அதிகாரமும் குறைவடைந்துள்ளது. இதனால் மாற்றுத்தெரிவு குறித்து சிந்திக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
‘நாம் தான் ஆட்டுவிக்கின்றோம்’ என்று நினைப்பவர்களுக்கு தாம் சரியான ‘பாகன்கள்’ இல்லை என்பதையும் கையிலிருப்பது உண்மையான ‘அங்குசம்’ இல்லையென்பதையும் காலம் உணர்த்தலாம்.
ஆனால், யானைகளுக்கும் பாகன்களுக்குமிடையிலான உறவில் எப்போது என்ன நடக்குமெனச் சொல்ல முடியாது.
ஏ.எல்.நிப்றாஸ்
வீரகேசரி
01.04.2018
No comments:
Post a Comment