ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை இலங்கையிடம் கையளிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸார் வெளிவிவகார அமைச்சினூடாக இக் கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரக பொலிஸாரிடம் முன்வைத்துள்ளதாகவும் அதில் உதயங்கவை இலங்கைக்கு நாடு கடத்தக் கோரியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் ''கேசரி''க்கு தெரிவித்தார்.
டுபாய் விமான நிலையத்தில் வைத்து வெளிநாடொன்றுக்குச் செல்லும் நோக்குடன் வந்த உதயங்க வீரதுங்கவை அந் நாட்டு பாதுகாப்பு தரப்பு கைது செய்து தற்போது அபுதாபிக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் இந் நிலையிலேயே அக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி டுபாயில் கைதான உதயங்கவை அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர் செய்து அதில் கிடைக்கப்பெறும் தீர்மானத்துக்கமையவே இலங்கைக்கு அவரை நாடு கடத்துவதா இல்லையா என்ற இறுதித் தீர்மானத்துக்கு அந்நாட்டு அதிகாரிகள் வருவர் என ஐக்கிய அரபு அமீரக தகவல்களை மேற்கோள்காட்டி உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தகவல் தெரிவித்தார்.
இந் நிலையில் உதயங்க வீரதுங்கவை எப்படியேனும் இலங்கைக்கு அழைத்து வந்து இங்கு அவருக்ெகதிராகவுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாகவும் இது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மிக்–27 ரக விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் 14 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபராக கருதி தேடப்பட்டு வரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாயில் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முதன்முறையாக கைது செய்யப்பட்ட நிலையில் அவரை இலங்கைக்கு அழைத்து வர பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி இரு சிறப்புக் குழுக்கள் டுபாய் சென்றன.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு அவரை இலங்கைக்கு அழைத்துவரும் முயற்சியாக டுபாய் சென்றனர். எனினும் பெப்ரவரி 8 ஆம் திகதி டுபாய் அதிகாரிகள் உதயங்கவை விடுதலை செய்ததுடன் அழைத்து வரச் சென்ற குழுவும் வெறுங்கையுடன் நாடு திரும்பியது.
பின்னர் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.டி.பிரியந்த உள்ளிட்ட சிறப்புக்குழுவொன்றும் மீளவும் உதயங்கவை இலங்கைக்கு அழைத்துவரும் முயற்சியாக டுபாய் சென்றது. எனினும் அம் முயற்சியும் கைகூடவில்லை. இந்நிலையிலேயே கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி உத யங்க வீரதுங்க டுபாய் விமான நிலையத் தில் வைத்து மீளவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment