அம்பாறை பிரதேசத்திலுள்ள முஸ்லிம் ஜும்ஆ பள்ளிவாசலும் அதனை அண்மித்துள்ள சில முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டதினையும், முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டதையும் எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியொன்று அமைதியான முறையில் இன்று ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து ஒலுவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதனை Teletamil நிறுவனம் ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசலோடு இணைந்து நடாத்தியதுடன் இதில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினையும் அமைதியான முறையில் தெரிவித்தனர்.
ஒலுவில் ஜூம்ஆப் பள்ளிவாசலில் இருந்து தபால் நிலையம் வரையிலான தூரத்திற்கு நடந்தவண்ணம் பதாதைகளை ஏந்தியவாறு ஒலுவில் மக்கள் தங்களது எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்தனர்.
"வணக்கஸ்தலங்களை உடைக்காதீர்கள் நாங்களும் உங்கள்
சகோதரர்களே'!
"நாங்களும் இலங்கைப் பிரஜைகளே எங்களது மதசுதந்திரத்தை பறிக்காதீர்கள்.
குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.
எமது தாய்நாட்டில் எமக்கு பாதுகாப்பு இல்லையா?
எம் நாட்டின் மிகப்பெரிய ஊடகங்களே எம் சகோதரர்களுக்கு நடந்த அநீதியை வெளியுலகிற்குச் சொல்லுங்கள்.
போன்ற பதாதைகளை ஏந்தியே இம்மக்கள் இவ்வமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர். அத்துடன் இவ்வாறான சம்பவங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந்த வன்செயலைச் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் ஜனாதிபதி, மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றும் Teletamil நிறுவனமூடாக அனுப்பி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
AM. றினூஸ்
No comments:
Post a Comment