அம்பாறை நகரில் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் மூன்று உணவகங்கள் உள்ளிட்ட நான்கு முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
இவர்கள் ஐவரும் நேற்று மீள அம்பாறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அவர்களுக்கு அனுமதியளித்ததுடன், சந்தேக நபர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் ஐவரும் கடந்த புதன்கிழமை இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நேற்று முன்தினம் அம்பாறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே அவர்களை நேற்று நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது, மன்றுக்கு விஷேட மேலதிக விசாரணை அறிக்கையை சமர்பித்த பொலிஸார் அம்பாறை நகரில் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் மூன்று உணவகங்கள் உள்ளிட்ட நான்கு முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது, முதலில் உணவகமொன்றில் இடம்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்களுடன் இந்த ஐவரும் தொடர்புபட்டுள்ளதாக நீதிவானுக்கு தெரிவித்தனர்.
அத்துடன் இந்த வன்முறைகள் தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டியுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் நீதிவானுக்கு தெரிவித்தனர். இந்நிலையிலேயே குறித்த ஐவரையும் பிணையில் விடுவிக்க நீதிவான் அனுமதியளித்துள்ளார்.
இதனிடையே அம்பாறை நகரில் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிறுவங்கள் மீதும் முஸ்லிம்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அனைத்து சந்தேக நபர்களைக் கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வன்முறைக்கு வந்த பெரும்பான்மை இன குழுவினரை அடையாளம் காண பிரதேசத்தின் பல முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு கமரா பதிவுகளை பெற்று அதனை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும், சம்பவத்தின் போது சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புக்களை மையப்படுத்தியும் சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய கோணங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெதசிங்க ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமந்த டி விஜேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
No comments:
Post a Comment