சவூதி அரேபியாவினால் அக்கரைப்பற்று, நுரைச்சோலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தினை மாவட்ட இன விகிதாசாரத்திற்கமைய பகிர்ந்தளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்படுக்கப்பட்டுள்ளது.
இந்த வேண்டுகோள் தொடர்பான தீர்மானம் கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்ரமவின் ஏற்பாட்டில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சவூதி வீட்டுத் திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு கையளிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டம் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இன்றுவரை கையளிக்கப்படாமல் காணப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த வீட்டுத் திட்டம் பாவனைக்குதவாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அவர் இதன்போது குறிப்பிட்டார்.
நாட்டின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப இந்த வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகளை பகிர்ந்தளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், மாவட்ட இன விகிதாசாரத்திற்கமைய இந்த வீடுகளை பகிர்ந்தளிக்குமாறு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறினார்.
குறித்த தீர்மானத்தினை மீண்டும் இன்றைய கூட்டத்தில் (செப்டம்பர் 30) நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். இதற்கமைய, முஸ்லிம், சிங்கள மற்றும் தமிழ் என்ற விகிதாசார அடிப்படையில் இந்த வீடுகளை பகிர்ந்தளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நீதிமன்ற தீர்ப்பிற்கு அகௌரவம் ஏற்படுத்தக்கூடாது. இதனால் குறித்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரமொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினை கோர மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த வீடுகளை உடனடியாக மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் கமூத் அல்கஹ்தானி மிகவும் அக்கறையாக செயற்படுவதாகவும் குறித்த வீடுகளை புனரமைத்துத்தர தயாராகவுள்ளதாகவும் சவூதி தூதுவர் உறுதியளித்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த வீட்டுத் திட்டத்தில் 500 வீடுகள், இரண்டு பாடசாலைகள், பஸ் தரிப்பிடம், வைத்தியசாலை, பள்ளிவாசல்கள் போன்றன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment