சவூதி விஷன் 2030 திட்டத்தின் கீழ், எல்லாவகையான விசாக்களை வைத்திருக்கும் முஸ்லிம்கள் புனித உம்ரா கடமையை நிறைவேற்ற முடியும் என அந்நாட்டு ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
புனித உம்ரா கடமையை எளிதாக நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரசாங்கம் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சவூதி விஷன் 2030 திட்டத்தின் கீழ், இந்த சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் தொழில் வாய்ப்புக்காக வந்து பணியாற்றுவோருக்கே இச்சிறப்புத் திட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதற்கிணங்க, விசா வேறுபாடுகளின்றி இவர்கள் புனித உம்ரா கடமையைச் செய்வதற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
உம்ரா பயணிகளுக்கான நடைமுறைகளை எளிதாக்குவதும், இப்புனித கடமைக்காக அதிகபட்ச வசதிகளை வழங்குவதுமே இதன் முக்கிய இலக்காகும் என அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட மற்றும் குடும்ப வருகை விசாக்கள், மின்னணு சுற்றுலா விசாக்கள், போக்குவரத்து விசாக்கள், பணி விசாக்கள் மற்றும் பிற வகையான விசாக்கள் உள்ளோரும் இப்புதிய முறையில் புனித உம்ரா கடமையை மேற்கொள்ள முடியும்.இதற்காக தனியான விசாக்களைப் பெறுவது அவசியமற்றதாக்கப்பட்டுள்ளது.
உம்ரா செய்ய விரும்புவோர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘நுசுக் உம்ரா’ டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தி, தங்களுக்குப் பொருத்தமான தொகுப்பைத் தேர்ந்தெடுத்து, உம்ரா அனுமதிகளை இலத்திரனியல் முறையில் எளிதாகப் பெறலாம்.
இந்த நடவடிக்கை, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் சிரமமின்றி புனித யாத்திரையை மேற்கொள்ள, சவூதி அரசு வழங்கும் சேவைகளை மேலும் விரிவுபடுத்துகிறமை குறிப்பிடத்தகக்கது.
Vidivelli
No comments:
Post a Comment