மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம், பிற்போட வேண்டிய தேவை எமக்கில்லை : இனங்களை பிளவுபடுத்தி அரசியல் செய்யும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம் - பிரதமர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 9, 2025

மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம், பிற்போட வேண்டிய தேவை எமக்கில்லை : இனங்களை பிளவுபடுத்தி அரசியல் செய்யும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம் - பிரதமர் தெரிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இனங்களை பிரித்து முரண்பாடுகளுடன் அரசியல் செய்யும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அனைத்து இன மக்களையும் இலங்கையர் என்ற அபிமானத்துடன் ஒன்றிணைத்துள்ளோம். மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம். தேர்தல் குறித்து எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியத் தேவையில்லை. தேர்தலை பிற்போடுவதற்கான அவசியம் எமக்கு கிடையாது. தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு கண்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09)நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் தெரிவு செய்யப்பட்ட விடயங்களுக்கு முனன்னுரிமையளித்து அவற்றை செயற்படுத்தியுள்ளோம். போதைப் பொருள் ஒழிப்பு, அரச நிர்வாகம் டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் சட்டவாட்சி கோட்பாட்டை சிறந்த முறையில் செயற்படுத்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமையிக்கப்பட்டுள்ளது.

இனங்களை பிரித்து முரண்பாடுகளுடன் அரசியல் செய்யும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவந்து அனைத்து இன மக்களையும் இலங்கையர் என்ற அபிமானத்துடன் ஒன்றிணைத்துள்ளோம். அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு ஜனநாயக பாதையில் பயணிக்கிறோம். வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை அடையாளப்படுத்தியுள்ளோம். வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே கட்டத்தில் செயற்படுத்த முடியாது.

நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்கும்போது நாடு எவ்வாறான நிலையில் இருந்தது என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டிய தேவை கிடையாது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இலங்கைக்கு கடன் வழங்குவதும், அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவதும் ஸ்தம்பிதமடைந்திருந்தது. நாட்டை இல்லாதொழித்தவர்களை புறக்கணித்து மக்கள் எமக்கு ஆணை வழங்கினார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற நிலைப்பாட்டை எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள். இன்றும் அந்த நிலைப்பாட்டில்தான் அவர்கள் உள்ளார்கள். இவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் தோற்கடித்து, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நம்பிக்கையை பெற்றுக் கொண்டுள்ளோம்.

ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்தில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். எமது ஆட்சியில்தான் அமைதியான முறையில் இரண்டு பிரதான தேர்தல்களை நடத்தினோம். தேர்தல் காலத்தில் ஊரடங்கு சட்டத்தை நாங்கள் பிரயோகிக்கவில்லை. இது சாதாரனதொரு விடயமல்ல.

மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம். தேர்தல் குறித்து எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியத் தேவையில்லை. தேர்தலை பிற்போடுவதற்கான அவசியம் எமக்கு கிடையாது. தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு தீர்வு கண்டவுடன் தேர்தல் நடத்தப்படும்.

சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரம் மற்றும் தத்துவங்களை உறுதிப்படுத்தியுள்ளோம். புதிய ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்கும், ஆணைக்குழுக்களுக்கு சிறந்தவர்களை நியமிப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

கல்வித் துறையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். நடைமுறை கல்வி முறைமையில் உள்ள குறைபாடுகள், பாடசாலை முறைமையில் காணப்படும் பற்றாக்குறைகளுக்கு தீர்வு காண்பதற்கும், உயர் கல்வி முறைமையை விரிவுபடுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

சகல தரப்பினரும் கோரிய புதிய கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அடுத்தாண்டு முதல் 1-6 தரங்களுக்கான பாடத்திட்டத்தை மறுசீரமைக்கவும், கல்வி ஆணைக்குழுவையும் உருவாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். என்றார்.

No comments:

Post a Comment