சகல தரப்பினரினதும் யோசனைகள், கருத்துக்களை பெற்று முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் - அமைச்சர் சந்தன அபேவர்தன தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 9, 2025

சகல தரப்பினரினதும் யோசனைகள், கருத்துக்களை பெற்று முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும் - அமைச்சர் சந்தன அபேவர்தன தெரிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சமூகம், கலாசாரம், சட்டம் மற்றும் ஏனைய விடயங்களை கருத்திற் கொண்டு இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தினருக்கு மாத்திரமல்ல, இலங்கையில் வசிக்காத முஸ்லிம்களுக்கும் உரியவாறான வகையில் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் 2 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வது தொடர்பில் பரிசீலிக்கப்பட வேண்டும். இது மிகவும் உணர்வுபூர்வமான காரணி என்பதால் ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதும், திருத்தங்களை மேற்கொள்ளும்போதும் சகல தரப்பினரினதும் யோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்றுக் கொள்வது அவசியமாகும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற அமர்வின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பொதுத் திருமண கட்டளைச் சட்டம் (ii) கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் மற்றும் (iii) முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் என்ற மூன்று சட்டக் கட்டமைப்புக்களின் கீழ் மட்டுமே இலங்கை சட்டத்தின் ஊடாக திருமணங்கள் பதிவு செய்ய முடியும்.

இரு தரப்பினரும் முஸ்லிம்கள் எனில் அவர்களது திருமணம் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று பொதுத் திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் சுற்றறிக்கைகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

திருமணத்தில் இலங்கை முஸ்லிம் மற்றும் வெளிநாட்டு முஸ்லிம் தொடர்புப்பட்டிருந்தால், தற்போதுள்ள மூன்று சட்ட வகைகளில் எதன் கீழும் குறித்த திருமணத்தை சரியாக பதிவு செய்ய முடியாத சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்த முரண்பாடு சட்ட ரீதியான மற்றும் நிர்வாக வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதை ஏற்றுக்கொள்வீர்களா என்று வினவியுள்ளார். இவ்வாறான திருமணங்களுக்கு நடைமுறையில் உள்ள சட்டத்தில் எவ்வித ஏற்பாடுகளும் கிடையாது என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

இதன் விளைவாக முஸ்லிம் பிரஜைகள் தங்கள் திருமணத்தை பொதுத் திருமண கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று அறிவிக்குமாறு பதிவாளர் திணைக்களத்தின் அதிகாரிகளால் எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் ஏற்பாடுகள் குறித்து முஸ்லிம் பிரஜைகளுக்கு தெளிவுபடுத்தப்படுகிறது. சமூகம், கலாசாரம், சட்டம் மற்றும் ஏனைய விடயங்களை கருத்திற்கொண்டு இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தினருக்கு மாத்திரமல்ல, இலங்கையில் வசிக்காத முஸ்லிம்களுக்கும் உரியவாறான முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் 2 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வது தொடர்பில் பரிசீலிக்கப்பட வேண்டும்.

இது மிகவும் உணர்வுபூர்வமான காரணி என்பதால் ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதும், திருத்தங்களை மேற்கொள்ளும்போதும் சகல தரப்பினரின் யோசனைகள் மற்றும் கருத்துக்களை பெற்றுக்கொண்டு அத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment