இது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வாரம் - ரோஹித்த அபேகுணவர்தன தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 9, 2025

இது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வாரம் - ரோஹித்த அபேகுணவர்தன தெரிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வாரம். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற குழுவில் பிரதான சூத்திரதாரி பற்றி குறிப்பிட்டதாக வெளியாகியுள்ள செய்தியின் உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தது. அரசாங்கம் பதவிக் காலத்தில் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. ஆனால் வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

பதவிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் எதிர்வரும் வாரம் மின் கட்டணத்தை 6 சதவீதத்தால் அதிகரிக்க உத்தேசித்துள்ளீர்கள். இது எந்தளவுக்கு நியாயமானது.

மக்களின் அரசியல் சிந்தனையை திசைதிருப்பும் வகையில் அரசாங்கம் புதிய விடயங்களை சமூகமயப்படுத்துகிறது. மதுபான வாரம், பட்டலந்த வாரம், ஐஸ் வாரம், கஜ்ஜா வாரம் என்று ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விடயங்கள் குறிப்பிடப்பட்டன. ஆனால் எந்த விடயமும் முழுமையாக விசாரிக்கப்படவில்லை. அதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த வாரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வாரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பற்றி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாராளுமன்ற குழுவில் குறிப்பிட்டதாக வெளியாகியுள்ள செய்தியின் உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

குண்டுத் தாக்குதாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆகவே இந்த வாக்குறுதியையும் ஏனைய வாக்குறுதிகளைப் போன்று பொய்யாக்கக் கூடாது என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment