(எம்.மனோசித்ரா)
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காகவே தான் அதனை விமர்சிப்பதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கடந்த ஜனவரியில் எவ்வித சோதனைகளும் இன்றி துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அளித்துள்ள முறைப்பாடு குறித்த விசாரணைக்கு இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (09) முன்னிலையாகியிருந்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இன்று முழு நாடும் பாற்சோறு உண்ண வேண்டிய நாளாகும். வரலாற்றில் முதன்முறையாக எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காகவே நாம் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைக்கின்றோம். ரங்க திஸாநாயக்கவின் பொய் நாடகங்களை நிறுத்துவதற்காகவே நாம் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
ஜனவரி மாதம் இடம்பெற்ற இந்த கொள்கலன் விடுவிப்பு மோசடி தொடர்பில் ஒன்பது மாதங்கள் கடந்தேனும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
கொள்கலன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக செயற்பட்ட சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருங்கொட, அவற்றில் போதைப் பொருட்கள், ஆயுதங்கள், தரம் குறைந்த மருந்துகள் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
அவர் இவ்வாறான கருத்தை தெரிவித்த அந்த சந்தர்ப்பத்தில் கூட பெக்கோ சமனுடை போதைப் பொருள் தயாரிப்பு மூலப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளன.
இது தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சின் செயலாளர், பிரதி திறைசேரி செயலாளர் உள்ளிட்டோரடங்கிய விசாரணைக்குழுவினால் நியாயமான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் 28ஆவது பக்கத்தில் துறைமுகத்தில் நிலவிய நெரிசலுக்கான தீர்வாகவே குறித்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக, விசாரணைகளின்போது தம்மால் இனங்காணப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அந்த காரணம் பொய்யானது என அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
27ஆவது பக்கத்தில் சோதனைகள் இன்றி கொள்கலன்களை விடுவித்து பொறுப்பிலிருந்து விலகுவதற்கு பணிப்பாளர் நாயகத்துக்கு சட்டத்தில் அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
29ஆவது பக்கத்தில் இவர்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை முன்னெடுத்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சீவலி அருங்கொடவுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு வழங்கியுள்ளார்.
ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்கள் கூட இல்லாத நிலையில், அவரை விட சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் இருந்த போதிலும், தண்டனை பெற வேண்டிய ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கியதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு என்ன கூற முற்படுகிறது?
நாம் ஊழல், மோசடியாளர்களை பாதுகாப்பதோடு எமக்கு வேண்டியவற்றை செய்வோம் என்பதே அரசாங்கத்தின் செய்தியாகும் என்றார்.
No comments:
Post a Comment