வாடிகல, ரன்ன பகுதியில் உள்ள வீடொன்றில் இரட்டைக் கொலை இடம்பெற்றுள்ளது.
ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் இன்று (07) அதிகாலை ஒரு ஆணும், பெண்ணும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் சடலங்களாக காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மரணித்தவர் தனது நண்பரின் வீட்டில் அவரது மனைவியுடன் தங்கியிருந்தபோது, முகக்கவசம் அணிந்த சுமார் ஐந்து பேர் கொண்ட குழு வீட்டிற்குள் நுழைந்து கூரிய ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இறந்தவரும் குறித்த பெண்ணும் 28 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் ரன்ன மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரணமடைந்தவரான ‘போ பசிந்து’ எனும் நபர், திட்டமிட்ட பல கொலைகள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகநபராக காணப்படுவதோடு, போதைப் பொருள் வைத்திருந்ததற்காக இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் மார்ச் 06 ஆம் திகதி ரன்ன, நிதிஷகம பகுதியில் படகு ஓட்டுநர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக இறந்தவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து ஹுங்கம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment