சுவசெரிய இலவச சேவையின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் பைத்தியக்காரத்தனமான செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும் - சபையில் வலியுறுத்திய ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 9, 2025

சுவசெரிய இலவச சேவையின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் பைத்தியக்காரத்தனமான செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும் - சபையில் வலியுறுத்திய ஹர்ஷ டி சில்வா

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சுவசெரிய இலவச சேவையின் கட்டமைப்பை மாற்றியமைக்கும் பைத்தியக்காரத்தனமான செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும். 75 ஆண்டு காலத்தை சாபம் என்று விமர்சிக்கும் அரசாங்கம் சிறந்த திட்டங்களைப் பற்றி பேசுவதில்லை. நடுத்தர மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுவசெரிய சேவையை இல்லாதொழிக்க வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நடுத்தர மக்களுக்கு பூரண சுகாதார அவசர வசதிகளை கட்டணமின்றி வழங்குவதற்காக சுவசெரிய அம்புலன்ஸ் வண்டிச் சேவை நல்லாட்சி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்குரிய 2018 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க 1990 சுவசெரிய சட்டமூலத்தை 2018.06.18 ஆம் திகதியன்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தேன்.

சுவசெரிய சட்டத்தின் பிரகாரம் 1990 சுவசெரிய மன்றம் ஒன்றை ஸ்தாபித்து அதனூடாக இலவச சேவையை முன்னெடுப்பது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது. சுவசெரிய திட்டத்துக்கு என்று பிரத்தியேகமான இலட்சினை மற்றும் நிறம் காணப்படுகிறது.

சுவசெரிய திட்டத்தின் இலட்சினை மற்றும் நிறத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது. இலட்சினத்தின் பச்சை நிறத்தை மாற்றி உங்களின் (ஆளும் தரப்பு) நிறத்தை வடிவமைக்க பணித்துள்ளீர்கள். இந்த பைத்தியக்காரத்தனமான செயற்பாட்டை உடன் நிறுத்துங்கள்.

இந்த சேவையில் காணப்படும் குறைபாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுங்கள் அதனை விடுத்து சேவையை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளாதீர்கள் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment