திடீர் மரண விசாரணைகள் தொடர்பிலான புதிய சட்டதிட்டங்கள் சாதாரண மக்களை மேலும் சிரமப்படுத்தும். அத்துடன், குறிப்பாக முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க செயற்பாடுகளை மேலும் பாதிப்படையச் செய்யும் என தேசிய ஷூரா சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள திடீர் மரணங்கள் குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மரண விசாரணைகளை நீதித்துறைக்கு சுமத்தி, ஏற்கனவே நெருக்கடியான பணிச்சுமையில் உள்ள நீதவான் நீதிமன்றங்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் என தேசிய ஷூரா சபை நீதியமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேசிய ஷூரா சபையின் தலைவர் எம்.எம். ஸுஹைர் ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் ஆகியோர் ஒப்பமிட்டு கடந்த 5 ஆம் திகதி நீதியமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 370(3) இன் கீழ், குற்றவியல் உட்பட குற்றம் கவனக்குறைவு பற்றிய நியாயமான சந்தேகம் உள்ள சந்தர்ப்பங்களில் மாத்திரம் நீதவான் நீதிமன்றங்களில் மரண விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை தொடர வேண்டும் எனவும் திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் பணிச்சுமையை நீதவான் நீதிமன்றங்களின் மீது திணிக்க வேண்டாம்.
சட்டத்தை மக்கள் இலகுவானதாகவும், பொதுமக்களுக்கு செலவு குறைந்ததாகவும், நீண்டகால சட்ட தாமதங்களைக் குறைப்பதான நீதி அமைச்சின் முயற்சிகளை வரவேற்கிறோம். இருப்பினும், பரிந்துரைக்கப்படவிருக்கும் சில புதிய திட்டங்கள் சட்ட தாமதங்களுக்கு மேலும் வழிவகுக்கும். அத்துடன் நீதிமன்றங்கள் மூலமான பிரேத விடுவிப்பு நடைமுறையானது துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும்.
99% திடீர் மரணங்கள் இயல்பான மரணங்களாகவே கடந்தகால புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, சந்தேகிக்கும்படியான 1%க்கும் குறைவான மரணங்களின் விதிவிலக்கான வழக்குகளுக்கு மாத்திரமே தேவைப்படும் நீதவான் நீதிமன்ற விசாரணைகள் மற்றும் பிரேதப் பரிசோதனைகளுக்கு (Post Mortems) இந்த 99% ஆனவர்களும் உட்படுத்தப்படுவது நியாயமற்றது.
மேலும் இவ்வாறான புதிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ள இலகுவான நடைமுறைமையை விட மேலும் கடினமாக்குவதுடன் துயரத்தில் உள்ள குடும்பங்களை மேலும் சிரமப்படுத்துகின்றது. குறிப்பாக முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க செயற்பாடுகளில் இவை மேலும் பாதிப்படையச் செய்யும்.
பிரேத பரிசோதனைகள் அரசாங்கத்திற்கு அதிகபட்ச கூடுதல் நிதியைச் செலவிட வழிவகுக்கின்றன. அத்துடன் துயரத்திலுள்ள குடும்பங்களுக்கும் கூடுதல் செலவுகளை ஏற்படுத்துகின்றன. இறந்த மனித உடல்களுக்கும் சர்வதேச சட்டங்கள் மற்றும் வழக்கமான மத நடைமுறைகளின் கீழ் மரியாதை மற்றும் கண்ணியம் அவசியம். எல்லா மதங்களும் இறந்தவர்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்குகளை வலியுறுத்துகின்றன.
எனவே, அரசாங்கம் நீதவான் நீதிமன்றங்களை மேலும் சுமைப்படுத்தாமல், மாறாக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை தொழிலாளர் பிணக்குகள் சபையின் ஆணையாளர்களுக்கு இணையான வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்.
அத்துடன், புதிய நியமனங்களுக்கு நியாயமான ஊதியத்துடன் கூடிய கல்வித் தகைமைகளை கொண்டவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அரசாங்கத்தின் வாக்குறுதிக்கேற்ப, தற்போதுள்ள சட்டங்களில் மாற்றங்கள் சட்ட தாமதங்களைக் குறைத்து, செயல்முறையைச் செலவு குறைந்ததாகவும், திடீர் மரண விசாரணை அதிகாரிகளை மக்கள் நம்பக்கூடியதாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vidivelli
No comments:
Post a Comment