அண்மையில் மித்தெனிய பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ‘கஜ்ஜா’ என அழைக்கப்படும் அருண ஷாந்த விதானகமகே எனும் நபர், ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனைக் கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒரு சந்தேகநபர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் இன்று (30) பிற்பகல் பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளிப்படுத்தினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், CCTV காட்சியொன்றில் வசீமை பின்தொடர்ந்து செல்லும் வாகனத்தில் சென்றதாக தெரிவிக்கப்படும் நபர் தொடர்பில் இதுவரை அறியப்படாமல் இருந்ததாகவும், அந்நபரின் அங்க அடையாளங்கள், அவரது உடல் அசைவுகள் நடந்து கொள்ளும் விதத்தின் அடிப்படையில், அது கஜ்ஜா என அவரது மனைவி உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தன்னுடன் 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த கணவர்தான் அது என அவர் உறுதிப்படுதியதாக இங்கு மேலும் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் கஜ்ஜா எனும் குறித்த நபர் பிரபல யூடியூப் சனல் ஒன்றிற்கு வழங்கிய பேட்டி ஒன்றில், வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசேட சம்பவம் ஒன்றை குறிப்பிட்டு கூறியிருந்ததாகவும், அதன் அடிப்படையில் அவரது மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரது கணவர் குறித்த யூடியூப் சனலுக்கு வழங்கிய பேட்டி தொடர்பில் தெரிவித்ததாகவும் பின்னர் இதுவரை அடையாளம் காணப்படாமல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்த குறித்த CCTV காட்சியை காண்பித்தபோது அதில் இருப்பது தன்னுடன் 17 வருடங்களாக வாழ்ந்த தனது கணவரான ‘கஜ்ஜா’ என உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த தெளிவற்ற CCTV காட்சியில் ஒரு சந்தர்ப்பத்தில் நபர் கைகளை நீட்டியவாறு நிற்கும் சந்தர்ப்பம் ஒன்றை சுட்டிக்காட்டிய குறித்த பெண், தனது கணவருக்கு நீண்ட காலமாக முதுகு வலி இருந்து வந்ததாகவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் இவ்வாறு நிற்பதை பழக்கமாக கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டதாக, பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார்.
தென் மாகாணத்தில், குறிப்பாக அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மெதமுலன, தங்காலை, மித்தெனிய போன்ற பகுதிகளில் சர்ச்சைக்குரிய மற்றும் பிரபல பாதாள உலக நபராக அறியப்பட்ட ‘கஜ்ஜா’ கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
தனது 6 வயது மகளுடனும், 9 வயது மகனுடனும் அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
‘கஜ்ஜா’ சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரது இரு பிள்ளைகளும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த மூவர் படுகொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில் இவ்விடயம் அம்பலமாகியுள்ளது.
ரிஸ்வான் சேகு முஹைதீன்
No comments:
Post a Comment