பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்.
அரசியலமைப்பின் 79 யாப்புக்கு அமைய பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டமூலத்தை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை அடுத்து திருத்தங்களுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய, இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 17 இலக்க பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.
இந்த சட்டம் பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகார சபையைத் தாபிப்பதற்காகவும்; (44 ஆம் அத்தியாயமான) குதிரைப் பந்தய ஓட்டத்தின்மீது பந்தயம் பிடித்தல் கட்டளைச் சட்டத்தையும், (46 ஆம் அத்தியாயமான) சூதாட்டக் கட்டளைச் சட்டத்தையும் மற்றும் 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தையும் நீக்குவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம் ஆகும்.
இலங்கையில் பணச்சூதாட்டத் தொழிலை ஒழுங்குபடுத்தல், பணச்சூதாட்டச் செயற்பாடுகளுக்கு தனியான ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகார சபையை ஸ்தாபித்தல் என்பவற்றுக்கு இந்த சட்டம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தேச அதிகார சபை கப்பல்களில் அல்லது கொழும்பு துறைமுக நகரத்தில் ஒன்லைன் மற்றும் கடல்கடந்த பணச்சூதாட்ட செயற்பாடுகள் தொடர்பில் சட்டரீதியாக அதிகாரமளிக்கக்கூடிய சமூகப் பொறுப்புக் கோவைகளை வெளியிடுவதற்கும் விரிவான விடயப்பரப்புடன் கூடிய சுயாதீன ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக செயற்படும்.
No comments:
Post a Comment