கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின்போது மரணித்த சிறுவன் ஹம்திக்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது. சட்டமா அதிபர் திணைக்களமும் இது தொடர்பான நடவடிக்கையை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற தண்டனை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இரண்டரை வயது சிறுவன் ஹம்தி பஸ்லின் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, 2022 இல் கொழும்பு சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள், சிறுவனின் இடது பக்க சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்காக சிறுவனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சத்திர சிகிச்சையின் பின்னர், சிறுவன் ஹம்தி 2023 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 27 ஆம் திகதி மரணமடைந்துள்ளார். மரண விசாரணைகளின்போது, சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் நீக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
என்றாலும் சத்திர சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர் மற்றும் அவரது உதவியாளர் தற்போது நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். சிறுவன் மரணித்து ஒரு மாதத்துக்குள் இவர்கள் நாட்டில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
என்றாலும் சத்திர சிகிச்சை தொடர்பில் சிறுவனின் பெற்றோர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த மார்ச் மாதம் சட்ட வைத்தியரால் மரண பரிசோதனை இடம்பெற்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
மரண விசாரணை அறிக்கையில், குற்றம் அல்லது கவனயீனம் இடம்பெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தை நிலைநாட்டுமாறு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை மேற்கொண்டு, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து, 6 மாதங்கள் கடந்துள்ளன. ஆனால் இது தொடர்பான குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கவோ, வழக்கு தொடுப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளோ சட்டமா அதிபர் திணைக்களம் இதுவரை செய்யவில்லை.
இது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர்களாக இருந்த கெஹலிய ரம்புக்வெல, ரமேஷ் பத்திரண ஆகியோரிடனம் நான் கேட்டிருந்தேன். அதேபோன்று இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, தற்போதுள்ள சுகாதார அமைச்சரிடமும் இந்த சிறுவன் தொடர்பான சுகாதார அமைச்சின் விசாரணைை அறிக்கையை கேட்டிருந்தேன். ஆனால் இதுவரை வழங்கவில்லை. அவ்வாறான விசாரணை அறிக்கை ஒன்று சுகாதார அமைச்சில் இல்லை.
அரசாங்கம் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கதைக்கிறது. நாட்டின் அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு கீழ்பட்டவர்கள் என ஜனாதிபதி தெரிவிக்கிறார். அப்படியானால் சிறுவன் ஹம்திக்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட இந்த அரசாங்கத்துக்கும் முடியாமல் போயிருக்கிறது. அதுதொடர்பில் கவலையடைகிறேன் என்றார்.
No comments:
Post a Comment