கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பிரிவு இந்த அரசாங்கத்தினால் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாண பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திக்கும்போது கவலை ஏற்படுகிறது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்வி பிரிவின் முகாமைத்துவ சபை கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டுள்ளது. அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றியோர், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர், வியாபாரிகள் என்போர்தான் இந்த முகாமைத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்கள்.
தேர்தல் காலங்களில் தமக்கு உதவியோர் மாதாந்தம் கொடுப்பனவு பெறும் வகையில்தான் இந்த முகாமைத்துவ சபை நியமனங்கள் அமைந்துள்ளன. நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திப்போர் கல்வியோடு தொடர்புபட்டவர்களைத்தான் கல்விப் பிரிவு முகாமைத்துவ சபைக்கு நியமிப்பர். இதை மறந்து அரசாங்கம் கிழக்கு மாகாண பாலர் கல்வியை அரசியல் மயப்படுத்தியுள்ளது.
இந்த நியமனங்களை மீள்பரிசீலனை செய்து கல்வியோடு தொடர்புள்ளவர்களை பாலர் கல்வி முகாமைத்துவத்திற்கு நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுநருக்கு நான் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தேன். அவர் சிறந்த கல்விமான் எனினும் அவர் இக்கோரிக்கையை கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. அரசாங்கத்தின் பணிப்பின்படியே அவர் கல்வியை அரசியல் மயப்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது
சிஸ்டம் சேஞ்ச் செய்வதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முன்னைய அரசாங்கங்கள் போல தமது கட்சிக்காரர்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றது என்பதற்கு கிழக்கு மாகாண பாலர் கல்வி முகாமைத்துவ சபை நியமனம் நல்ல உதாரணமாகும்.
கல்வி அனுபவம் எதுவுமில்லாத இந்த முகாமைத்துவ சபைதான் கிழக்கு மாகாண பாலர் கல்வியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றது. இதனை கிழக்கு மாகாண பெற்றோர் விளங்கிக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment