அனைத்து கொடுக்கல், வாங்கல்களையும் இணையவழியில் செய்யும் வசதி : அதிகாரத்தை மக்கள் நலனுக்கு பயன்படுத்தும் அரச அதிகாரிகளை பாதுகாப்போம் : தோற்கடிக்கப்பட்ட அரசியல் சக்திகள் இனவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்த முயற்சி : புதைகுழிகள் மீண்டும் உருவாகாத நாட்டை உருவாக்குவதே எங்கள் எதிர்பார்ப்பு - யாழ்ப்பாண பிராந்திய கடவுச்சீட்டு அலுவலக திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 1, 2025

அனைத்து கொடுக்கல், வாங்கல்களையும் இணையவழியில் செய்யும் வசதி : அதிகாரத்தை மக்கள் நலனுக்கு பயன்படுத்தும் அரச அதிகாரிகளை பாதுகாப்போம் : தோற்கடிக்கப்பட்ட அரசியல் சக்திகள் இனவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்த முயற்சி : புதைகுழிகள் மீண்டும் உருவாகாத நாட்டை உருவாக்குவதே எங்கள் எதிர்பார்ப்பு - யாழ்ப்பாண பிராந்திய கடவுச்சீட்டு அலுவலக திறப்பு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

அடுத்த ஆண்டுக்குள், அரசாங்கத்துடனான அனைத்து பண கொடுக்கல் வாங்கல்களையும் இணையவழியில் (Online) செய்யும் வசதி பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டமாக டிஜிட்டல் மயமாக்கலுடன், இவ்வளவு காலமும் கொழும்பிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் தொலைதூர கிராமங்களுக்கு பரவலாக்கப்பட்டு, அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய பணிகளை, மிக நெருக்கமாக பெற்றுக் கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (01) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், நவீன தொழில்நுட்பம் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

இதுவரை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகளை பெறுவதற்கு, வட மாகாணத்தின் ஒரே பிராந்திய அலுவலகமான வவுனியா பிராந்திய அலுவலகத்திற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. 

வட மாகாணத்திலிருந்து கடவுச்சீட்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இலகுவாக அந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இந்த பிராந்திய அலுவலகம் திறக்கப்படுகிறது. யாழ்ப்பாண மக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகள் வழங்குவதை குறிக்கும் வகையில், மூன்று கடவுச்சீட்டுகளை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

பின்னர், யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரச அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு, அரசியல் அதிகாரம் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் அரச அதிகாரிகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் அதேவேளை, பணத்திற்காக அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த தயங்கமாட்டோம் என்று வலியுறுத்திய ஜனாதிபதி, தற்போது, இந்நாட்டிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் நாட்டிற்கான தங்கள் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வலுவான அரச சேவை அவசியம் என்றும், உலகில் முன்னேற்றம் அடைந்த அனைத்து நாட்டினதும் முன்னேற்றத்திற்குப் பின்னால் வலுவான அரச சேவை இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறியதாவது, இன்று, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய அலுவலகத்திலிருந்து சேவைகளைப் பெறும் வசதியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

ஒரு அடையாள ரீதியாக குடிவரவு மற்றும் குடியகல்வு அனுமதிகளை வழங்குவதற்காக இது இருந்தபோதிலும், அதனை விட பாரிய நோக்கத்துடன் இந்தப் பணியில் நாம் தலையிட்டுள்ளோம். எமது முழு நிர்வாக அமைப்பும் கொழும்பை மையமாகக் கொண்டுள்ளது. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல பணிகளுக்காக கொழும்புக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இந்த நிர்வாகத்தை தொலைதூர கிராமங்களுக்கு பரவலாக்குவதே எமது அரசாங்கத்தின் குறிக்கோள். அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டிய பணிகளை தமக்கு மிக நெருங்கிய வகையில் பெற்றுக்கொள்ள வசதிகள் உருவாக்கப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டுக்குள் கணினி மென்பொருள் அமைப்புகள் மற்றும் உங்கள் தொலைபேசி மூலம் அரசாங்கத்துடனான அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் மக்கள் மேற்கொள்ளக் கூடிய வகையில் வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எமது அரசாங்கத்தின் முதன்மையான செயற்பாடு டிஜிட்டல் மயமாக்கல் ஆகும். மேலும், அரச சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இந்த இடத்தில் அன்றையதினம் நடைபெற்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில் ஏப்ரல் மாதம் கணிசமான அளவு சம்பள உயர்வை வழங்குவோம் என்று அறிவித்தேன். நாங்கள் அதைச் செய்தோம். எஞ்சியுள்ள பகுதியை அடுத்த ஜனவரியில் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு வலுவான அரச சேவை அவசியம். முன்னேறிய ஒவ்வொரு நாட்டிலும் வலுவான அரச சேவை உள்ளது. நமது நாட்டில் ஒரு வலுவான அரச சேவையை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

மேலும், உங்கள் கையொப்பத்திற்கு ஒரு சக்தி உண்டு. அந்த கையொப்பம் மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தப்பட்டால், நாங்கள் உங்களை முழுமையாகப் பாதுகாப்போம். ஆனால் அந்த கையொப்பம் பணத்திற்காக பயன்படுத்தப்பட்டால், சட்டம் அமுல்படுத்தப்படும். 

நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் ஒரு அரசு நமக்குத் தேவை. நமது நாடு சட்டம் காட்டுமிராண்டித்தனமான ஒரு நாடாகவும், அரச நிறுவனங்களின் கௌரவம் அழிக்கப்பட்ட நாடாகவும் மாறியிருந்தது. மீண்டும் ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் கௌரவம் நிலைநிறுத்தப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு அரச அதிகாரிக்கும் கௌரவத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காக, அந்த நிறுவனங்களுக்கு நாம் வசதிகளை வழங்கி வருகிறோம்.

நமது நாட்டை புதிதாகக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இந்த வட மாகாணத்திற்கு எம்மிடம் பாரிய அபிவிருத்தி திட்டம் உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில், வடக்கின் மக்கள் முதல் முறையாக அரசாங்கத்தை அமைக்க வாக்களித்தனர். பிளவுபட்டு, ஒருவருக்கொருவர் அவநம்பிக்கை கொண்டிருந்த ஒரு நாடு, அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தது. இப்போது நாம் செய்ய வேண்டியது, இந்த ஒன்றிணைவு வீழ்ச்சியடைய இடமளிக்காமல், அதை வலுப்படுத்தி, எதிர்கால சந்ததியினருக்கு ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.
தோற்கடிக்கப்பட்ட அரசியல் சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன என்பதை நாம் அறிவோம். இன்று வடக்கு மற்றும் தெற்கிலும் இதே நிலை காணப்படுகிறது. வடக்கிலோ அல்லது தெற்கிலோ மேற்கொள்ளப்படும் இந்த இனவாத அரசியல் மக்களுக்காக அன்றி அரசியல்வாதிகளுக்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. 

எனவே, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள நாம் அனைவரும் இந்த இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டும். இனவாதம் மீண்டும் எங்கும் தலை தூக்க அனுமதிக்கக்கூடாது. இதற்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருறோம்.

அரசாங்கமென்ற வகையிலும் தனிப்பட்ட ரீதியிலும் நாட்டில் மீண்டும் ஒரு போர் வராது என்று நாங்கள் நம்புகிறோம். யுத்தம் ஒன்று வரும் என்ற சிந்தித்து சிலர் செயற்பட்டார்கள். மீண்டும் ஒரு போர் நடக்காமல் தடுக்க நாங்கள் உழைத்து வருகிறோம். 

மக்களுக்கு முடிந்தவரை காணிகளை வழங்க வேண்டும். மூடப்பட்ட வீதிகளைத் திறக்க வேண்டும். நாம் ஒருவரையொருவர் சந்தேகிக்கக்கூடாது. மற்றொரு போரைத் தடுக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த மனநிலையுடன் நம் நாட்டைப் பார்க்க வேண்டும். நமது நாட்டை ஒரு புதிய சமூகத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும். 
பழைய தோல்வியுற்ற அரசியல் இயக்கங்கள், மதவாதம் மற்றும் சாதிவாதம் என்பவற்றைப் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஒரு நூற்றாண்டுக்கும் முந்திய காலத்திற்குரியவை. இன்று, இனம், மதம், சாதி அல்ல, மனிதநேயம் தான் பிரதான காரணி. எனவே, அனைத்து பிளவுகளும் மனிதநேயத்திற்கு அடிபணிய வேண்டும். மனிதநேயத்தை அனைத்தையும் விட உயர்வாக கருதும் ஒரு நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதுதான் நம் நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலமாகும்.

மண்ணைத் தோண்டும்போது, பழைய எலும்புக்கூடுகள் வெளிப்படுகின்றன என்பதை நான் அறிவேன். இப்போது, செம்மணி பகுதியில் உள்ள புதைகுழிகள் குறித்து மிகவும் வெளிப்படையான விசாரணையை நடத்தி வருகிறோம், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற புதைகுழிகள் மீண்டும் உருவாகாத நாட்டை உருவாக்குவதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.

தற்சமயம், நம்நாட்டிற்கு அவசியமானவற்றை நாம் செய்து வருகிறோம். நமது மதத் தலைவர்கள், அரசியல் அதிகாரம், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரதிநிதிகள், நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் செயல்படுவோம். அரசியல் அதிகாரம் என்ற வகையில் நம் தரப்பில் இருந்து நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இந்த நாட்டை நாம் அனைவரும் ஒன்றாகக் கட்டியெழுப்புவோம்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர், இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க,பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பதிராஜ, யாழ் மாவட்ட செயலாளர் எம். பிரிதீபன் மற்றும் அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment