அம்பலாந்தோட்டை மாமடல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (02) இரவு 7.30 மணியளவில் அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமடல, எலேகொட மேற்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அம்பலாந்தோட்டை எலேகொட மேற்கு பிரதேசத்தில் உள்ள கொலை செய்யப்பட்ட நபர்களில் ஒருவரின் வீட்டில் அவரது இரு நண்பர்களுடன் இருந்த வேளையில், சுமார் 6 பேர் கொண்ட குழுவொன்று வந்து அவரது வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்த மூவரையும் கூரிய ஆயுதத்தால் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
எலேகொட மற்றும் மாமடல பிரதேசத்தைச் சேர்ந்த ஹெட்டியாராச்சியின் பிரபாத் இந்திக்க (29), ஹேவாகுமநாயக்க ரசிக பிரியதர்ஷன (45), மாதவ உதயங்க மல்லிகாரச்சி (34) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெபாலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு தரப்பினருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரூபா 1,000 பெறுமதியான மதுபான போத்தலை ரூ.1500 இற்கு விற்பனை செய்தமை தொடர்பில் இத்தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியமையால் இறந்தவர்களுக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் தலையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளான காயமடைந்த மூவரும் உடனடியாக அம்பலாந்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை உறுதிப்பட்டுத்தியுள்ளது.
வீட்டிற்கு வந்த சந்தேகநபர்களில் ஐவர், பிரபாத் இந்திக்கவின் தாயாரால் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மாமடல எலேகொட மேற்கில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment