(எம்.மனோசித்ரா)
தென்னிந்நிய அரசியல்வாதிகளுக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கச்சதீவு செல்லவில்லை. அது எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். எனவே கச்சதீவு தொடர்பில் நாம் மீண்டும் பேச வேண்டிய தேவை இல்லை. அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு செல்ல முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அபிவிருத்தி திட்டங்கள் சிலவற்றை ஆரம்பித்து வைப்பதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்தில் மாத்திரமின்றி கிழக்கு மற்றும் ஏனைய மாகாணங்களிலும் அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வுகளில் எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதியின் கச்சதீவு விஜயம் அதிவிசேடமானதல்ல.
தென்னிந்தியாவில் அவ்வப்போது அரசியல் தலைவர்கள் கச்சதீவு குறித்து பேசுவது வழமையானதொரு விடயமாகும். அவர்கள் தமக்காக வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கச்சதீவு தொடர்பிலோ அல்லது வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலோ வாக்குறுதிகளை வழங்குவர்.
எனவே கச்சதீவு தொடர்பில் நாம் மீண்டும் பேச வேண்டிய தேவை இல்லை. கச்சதீவு எமக்கு உரித்தான நிலப்பரப்பாகும். அதில் சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து, அப்பகுதியை அபிவிருத்தி செய்வது குறித்தும் கூடுதல் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
அந்த வகையில் தென்னிந்தியாவில் கூறப்பட்ட கருத்துக்கும் ஜனாதிபதியின் கச்சதீவு விஜயத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அரச தலைவர் என்ற ரீதியில் நாட்டிலுள்ள சகல பிரதேசங்களுக்கும் ஜனாதிபதியால் செல்ல முடியும்.
அவ்வாறு செல்லும்போது மக்களுடன் கலந்துரையாடி, அப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் நேரடியாக அவதானம் செலுத்தினால் அது சிறந்ததாகும். நாம் அறிந்த வகையில் இதுவரையில் அரச தலைவரொருவர் கச்சதீவுக்குச் செல்லவில்லை. அந்த வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் மிக முக்கியத்துவமுடையதாகும் என்றார்.
No comments:
Post a Comment