முழு நெல் அறுவடையையும் அரசாங்கம் கொள்வனவு செய்துகொள்ளும் என்று ஆளும் தரப்பு பாராளுமன்றத்தில் தெரிவித்தாலும் அது சாத்தியமாகாது. யானை - மனித மோதலுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. உர மானியங்கள் உரிய நேரத்தில் கிடைக்காதது போன்ற பல பிரச்சினைகள் காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நெல்லுக்கான உத்தரவாத விலை கிடைக்காமை, அரசாங்கம் வாக்குறுதி வழங்கியபடி இலவச உரம் மானியத்தை இன்னும் பெற்றுத்தராமை உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி தெஹியத்தகண்டி பிரதேச விவசாயிகள் நேற்றையதினம் (31) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டு அவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
கிட்டிய நாட்களில் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு இந்த விடயங்களை முன்வைப்பதாகவும் இதன்போது தெரிவித்தார்.
இதற்கு முன்னர், கமநல சேவைகள் திணைக்களம் விவசாய செய்கைகளுக்கான கடன்களை வழங்கி வந்தன. ஆனால் இப்போது குறித்த கடன் வசதி வழங்கப்படுவதில்லை. பயிர் சேதத்திற்கு இழப்பீடும் வழங்கப்பட்ட பாடில்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில், அரிசி தேவையான தரத்தில் இல்லை. நெல்லுக்கான உத்தரவாத விலையை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அது இன்றும் நடக்கவில்லை.
எனவே எதிர்க்கட்சியாக விவசாய சமூகத்தின் சார்பாக எங்களால் முடிந்த குரலை எழுப்புவோம். இதற்கு செய்ய முடியுமான சகல தலையீடுகளையும் செய்வோம். இன்று மக்கள் எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து தீர்வுகளைக் கோரும் நிலைக்கு வந்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment