வடக்கு, தெற்கு மக்களுக்கு ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது : மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 1, 2025

வடக்கு, தெற்கு மக்களுக்கு ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது : மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

மீனவ சமூகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்கு தேவையான வசதிகளை வழங்கவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (01) காலை கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

கடந்த அரசாங்கங்கள் போரை எதிர்பார்த்து பணியாற்றிய போதிலும், இந்த நாட்டில் மீண்டும் எந்த விதமான யுத்தமும் ஏற்படாத வகையில் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாகவும், கடந்த போரின்போது பாதுகாப்பு படையினரின் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட வடக்கில் விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளும் மக்களுக்காக விடுவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் காணிகளை மக்களுக்காக பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், அதில் எந்த விதமான அழுத்தத்திற்கும் இடமளிக்கப் படாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜனாதிபதி அடையாள ரீதியாக தொடங்கி வைத்தார்.

இதன் கீழ், வட மாகாணத்தில் உள்ள மீனவ சமூகம் மாத்திரமன்றி, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், வலை தயாரிப்பு நிலைய வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் தொடர்பாடல் பரிமாற்ற மைய வசதிகள் என்பனவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த ஆண்டு அரசாங்கம் 298 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் மற்றும் வட மாகாண அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதானிகள் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment