காசா நகர் மீது இஸ்ரேல் தரை மற்றும் வான் வழியாக சரமாரி தாக்குதல்களை நடத்தி அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டுமானங்களை அழித்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 63 ஆயிரத்தை தாண்டி அதிகரித்து வருவதோடு பட்டினியால் மேலும் ஏழு பேர் உயிரிழந்திருக்கும் சூழலில் காசா நகரை கைப்பற்றுவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (31) அமைச்சரவையிலும் ஆலோசித்துள்ளார்.
போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றின் மூலம் பணயக் கைதிகளை மீட்டுவருவதற்கு இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுத்து டெல் அவிவில் நேற்று (31) இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோதும் போர் நிறுத்த முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.
நேற்றுக் காலை தொடக்கம் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் உதவிக்கு காத்திருந்த நிலையில் கொல்லப்பட்ட 13 பேரும் அடங்குவதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
காசா நகரின் மிகப்பெரிய சுற்றுப்புற பகுதிகளில் ஒன்றான ஷெய்க் ரத்வான் மீது இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி வருவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் நகரின் மேற்கை நோக்கி வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேல் இராணுவம் கடந்த இரண்டு வாரங்களில் காசாவைச் சூழ தனது இராணுவ நடவடிக்கையை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இங்கு உதவிகள் செல்வதற்கு அமுல்படுத்தப்பட்டு வந்த தற்காலிக போர் நிறுத்தத்தையும் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை (29) கைவிட்டதோடு அந்த பகுதியை ‘அபாயகரமான போர் வலயம்’ என்றும் அறிவித்தது.
‘கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்திருக்கும் நகரத்தின் மையப்பகுதிக்குள் அவர்கள் ஊடுருவி வருகிறார்கள், அதே நேரத்தில் மக்களை வெளியேற பயமுறுத்துவதற்காக அந்தப் பகுதிகளை வானிலிருந்தும் தரையிலிருந்தும் குண்டுவீசித் தாக்குகிறார்கள்’ என்று ஷெய்க் ரத்வானில் இருந்து இரண்டு குழந்தைகளின் தந்தையான ரெசிக் சலா, ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
காசா நகரை ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டை என கூறும் இஸ்ரேல் அதனை கைப்பற்றுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. அந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று இடம்பெற்ற இஸ்ரேலிய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் முழு அளவிலான தாக்குதலை அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்க முடியாது என கூறப்படுகிறது. தரைப் படைகளை நகர்த்துவதற்கு முன் அங்குள்ள பொதுமக்களை வெளியேற்ற வேண்டி இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
உணவு, தற்காலிக குடியிருப்பு மற்றும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடுகள் நிலவுவதோடு காசாவின் மற்றப் பகுதிகளிலும் இடம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு வசதிகள் இல்லாத சூழலில் நகரில் இருந்து மக்களை வெளியேற்றுவது சமாளிக்க முயாத நிலை ஒன்றை ஏற்படுத்தும் என்று செஞ்சிலுவை சங்க தலைவர் மிர்ஜானா ஸ்பொல்ஜரிக் கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.
‘தெற்கே உறவினர்களை கொண்டவர்கள் அங்கே தங்கி இருக்க முடியும். நான் உட்பட மற்றவர்கள் இடம் ஒன்றை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். டெயிர் அல் பலாஹ் மற்றும் மவாசியில் மக்கள் நிரம்பி வழிகிறார்கள்’ என்று காசா நகரின் சப்ரா பகுதியைச் சேர்ந்த ஐந்து குழந்தையின் தாயான காதா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் 2.2 மில்லியன் மக்கள் தொகையில் பாதி அளவானவர்கள் காசா நகரிலேயே தற்போது வசித்து வருகின்றனர். நகரத்தை விட்டு பல்லாயிரம் பேர் தற்போது தெற்கு மற்றும் மத்திய பகுதிளை நோக்கி சென்றிருப்பதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் இந்த தாக்குதல்கள் காசாவில் தொடர்ந்து ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று இஸ்ரேலிய அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரித்து வருகின்றனர். போரை முடிவுக்குக் கொண்டுவந்து பணயக்கைதிகளை விடுவிக்கும் போர் நிறுத்த உடன்படிக்கையை எட்டக் கோரி இஸ்ரேலில் அண்மைய நாட்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களும் தீவிரம் அடைந்துள்ளன.
டெல் அவிவில் சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையானோர் பங்கேற்றதோடு பணயக்கைதிகளின் உறவினர்கள் நேற்றுக் காலை அமைச்சர்களின் வீடுகளுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 88 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 421 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 22 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 63,459 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 160,256 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் தொடர்ந்து முடக்கி வரும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் ஏழு பலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் காசாவில் பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்திருப்பதோடு இவர்கள் 124 பேர் சிறுவர்களாவர். குறிப்பாக ஒருங்கிணைந்த உணவு பாதுகாப்பு நிலை வகைப்படுத்தல் அமைப்பினால் கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி காசாவில் பஞ்ச நிலை அறவிக்கப்பட்டது தொடக்கம் ஒன்பது சிறுவர்கள் உட்பட 22 பேர் கடுமையான பட்டினிக்கு மத்தியில் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment