2026ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெனாண்டோவினால் இன்று (26) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கிணங்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் செலவீனமாக ரூ. 443,435 கோடியே 64,68,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் செலவீனமாக ரூ. 421,824 கோடியே 80,18,000 ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம்ஆண்டுக்கான செலவீனம் ரூ. 21,610 கோடியே 84,50,000 இனால் அதிகரித்துள்ளது.
இந்த செலவீனத்துக்கான நிதி ஒதுக்கீடுகளில் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக ரூ. 64,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக ரூ. 61,744 கோடியே 50 இலட்சம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக ரூ. 3055 கோடியே 50 இலட்சம் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கும் ஜனாதிபதிக்கான செலவினமுமாக மொத்தம் ரூ. 111,715 கோடியே 9,980,000 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதி செலவீனமாக ரூ. 299,29,80,000 ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செலவீனமாக ரூ. 1137,79,80000 ஒதுக்கப்பட்டுள்ளது.இது 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட ரூ. 838,50,00,000 அதிகமாகும்.
பிரதமர் செலவினமாக 2025 ஆம் ஆண்டுக்கு ரூ. 117,0000,000 ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பிரதமருக்கான செலவீனமாக ரூ. 97,50,00,000 ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு பிரதமரின் செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் ரூ. 19,50,00,000 குறைவானதாகும்.
அதேவேளை, 2025 ஆம் ஆண்டு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி, அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுஉள்ளிட்ட இன்னும் சில அமைச்சுகளுக்கான ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை விடவும் 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பான வரவு செலவுத்திட்ட உரை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவினால் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதி நிகழ்த்தப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 08 ஆம் திகதி முதல் நவம்பர் 14 வரை 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதுடன் வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 05 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
📌 முக்கிய திகதிகள்
வரவு செலவுத் திட்ட உரை
நவம்பர் 07 (ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க)
இரண்டாவது வாசிப்பு விவாதம்
நவம்பர் 08 – 14 (6 நாட்கள்)
இரண்டாவது வாசிப்பு வாக்கெடுப்பு
நவம்பர் 14 மாலை 6.00 மணி
மூன்றாவது வாசிப்பு (குழுநிலை விவாதம்)
நவம்பர் 15 – டிசம்பர் 05 (17 நாட்கள்)
இறுதி வாக்கெடுப்பு
டிசம்பர் 05 மாலை 6.00 மணி
No comments:
Post a Comment