(எம்.மனோசித்ரா)
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சம்பிக ரணவக்க, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அனைவரும் கள்வர்களே. தாம் குற்றமிழைத்தவர்கள் என்பதால் ரணிலை கைது செய்யதவுடன் அச்சத்தில் இவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் இணைந்தால் கள்வர்களை கைது செய்வது இன்னும் இலகுவாகும் என தொழிற் பயிற்சிகள் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியினதோ பாராளுமன்றத்தினதோ அல்லது அமைச்சர்களினதோ கடமையல்ல. அதற்காக பிரத்தியே நிறுவனங்கள் உள்ளன.
கடந்த ஆட்சிக் காலங்களில் இந்த நிறுவனங்கள் அப்போதைய ஆட்சியாளர்களின் இரும்பு பாதணிகளுக்கு இரையாகியிருந்தன. இதன் காரணமாக கடந்த காலங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்பட்டு இவர்கள் தப்பித்துக் கொண்டனர்.
ஆனால் தற்போது எமது ஆட்சியில் அவ்வாறான நிலைமை இல்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை. எனவே ஆளுங்கட்சியானாலும், எதிர்க்கட்சியானாலும் சட்டம் அனைவரும் சமமாக பிரயோகிக்கப்படுகிறது. வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இவ்வாறு பாகுபாடின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ரணில் விக்கிரமசிங்க இழைத்த குற்றங்களையும் தவறுகளையும் மறைக்க முடியாது. அவர் இழைத்த குற்றங்களில் ஒன்றுக்கு மாத்திரமே விளக்கமறியல் சென்றார். ஆனால் இன்னும் பல கிடப்பில் உள்ளன. தம்மை பிரபலமானவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் யார்? ஜனாதிபதி நிதியத்திலிருந்து தமது நோய்களுக்காக நிதி பெற்ற அவர்கள் பிரபலங்களா? பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புலமைப்பரிசில் பெற்று கற்றுக் கொண்டிருக்கின்றார்.
இவர்கள் தம்மை பிரபலங்கள் எனக் கூறிக்கொண்டு நாட்டில் தேசிய சொத்துக்களை அழித்தவர்களாவர். அவர்கள் இன்று பிரபலங்கள் என்ற நிலையிலிருந்து இறக்கப்பட்டு சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் அவர்களுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் கள்வர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.
குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சம்பிக ரணவக்க, மைத்திரிபால சிறிசேன அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் அனைவருமே குற்றமிழைத்தவர்கள். ஆங்காங்கு ஒழிந்திருந்த அவர்கள் தற்போது ரணில் கைது செய்யப்பட்டுள்ளதால் அச்சமடைந்துள்ளனர்.
எனவே இவர்கள் ஒன்றிணையும்போது பெரிய பூட்டு ஒன்றைப் பூட்டினால் அனைவரையும் ஒரே சந்தர்ப்பத்தில் கைது செய்ய முடியும். தாம் குற்றவாளிகள் என்பதை தெரிந்து கொண்டுதான் அவர்கள் ஒன்றிணைந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment