பொலிஸ் உத்தியோகத்தர்கள் 300 பேர் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் : மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து அரச உத்தியோகத்தர்கள் பணியாற்றுங்கள் - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல - News View

About Us

About Us

Breaking

Sunday, August 31, 2025

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 300 பேர் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் : மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து அரச உத்தியோகத்தர்கள் பணியாற்றுங்கள் - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம். அரச சேவைக்கு பொறுத்தமற்றவர்கள் சேவையில் இருக்கக்கூடும். அவ்வாறான 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாண்டில் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

மஹரகம நகர சபையில் சனிக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகள் அரச சேவையை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

எவராயினும் நேர்மையாக பணியாற்றினால் யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயப்பட வேண்டிய நிலைமை ஏற்படாது. அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையை சரிவர நிறைவேற்றும் பட்சத்தில் நாம் அவர்களை பாதுகாப்போம்.

எவ்வாறிருப்பினும் அரச சேவைக்கு பொறுத்தமற்ற சிலர் இருக்கலாம். பொலிஸில் கூட அவ்வாறானவர்கள் இருக்கக்கூடும். அண்மையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பொலிஸாரின் எண்ணிக்கை குறைவாகும். அதற்காக சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்தும் சேவையில் நீடிக்க முடியாது. இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 300 பொலிஸார் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தவறிழைப்பவர்களை எக்காரணத்துக்காகவும் அரச சேவையில் வைத்திருக்கப்போவதில்லை. அதேபோன்று ஏனைய துறைகளிலும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து பணியாற்றுமாறு சகல அரச உத்தியோகத்தர்களையும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு செய்தால் மாத்திரமே நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணிக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment