பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்படவுள்ளன.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராகப் போராடும் பல சிவில் சமூக அமைப்புகள், இவ்விருவருக்கும் எதிராக முறைப்பாடுகளை முன்வைக்கத் தயாராகி வருவதாக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த அமைப்புக்கள் பெற்றுக் கொண்டுள்ளவற்றை ஆதாரமாக வைத்தே, இந்த முறைப்பாடுகள் கையளிக்கப்படவுள்ளன.
இது குறித்து சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் இந்த அமைப்புக்கள் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல கட்டுமானப் பணிகள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளும் இந்த முறைப்பாடுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இதுபோன்ற முறைப்பாடுகள் தகவலுடன் சமர்ப்பிக்கப்பட்டால், முறையான விசாரணைகளை நடத்தி தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம் என்றார்.
இவ்விடயத்தில், சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் முன்னர் வகித்த பதவிகள் மற்றும் அந்தஸ்துகள் கவனத்திற் கொள்ளப்படமாட்டாதெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment