(எம்.வை.எம்.சியாம்)
இந்த நாட்டில் இடம்பெறும் கொலைச் சம்பவங்கள் தனிப்பட்ட விடயம் அல்ல. அதன் பின்னணியில் மறைமுக சக்திகள் உள்ளன. எனவே குற்றச் செயல்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கெஹெல்பத்தர பத்மே, பெக்கோ சமன், கொமாண்டோ சலிந்த உள்ளிட்டோர் 6 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று இந்தோனேசியாவிற்கு சென்று அந்நாட்டு பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த விசேட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறிப்பாக இந்த நாட்டில் இடம்பெறும் கொலைச் சம்பவங்கள் தனிப்பட்ட விடயம் அல்ல. அதன் பின்னணியில் மறைமுக சக்திகள் உள்ளன. எனவே குற்றச் செயல்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட திட்டமொன்றை வகுத்தார்.
குற்றவாளிகள் தலைமறைவாகி இருப்பதாகக் கூறப்படும் நாடுகளுடன் இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தினார். குறிப்பாக இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் அவர் இராஜதந்திர ரீதியாகவும் அந்த நாட்டு புலனாய்வு துறையினருடனும் சிறந்த தொடர்புகளையும் பேணி வந்தார். அதன் பிரதிபலனாகவே எமக்கு இந்த குற்றவாளிகளை கைது செய்ய முடிந்தது.
அதேபோன்று இந்த நாட்டு பொலிஸாருக்கு சுயாதீனமாக செயற்படுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றவாளிகளை அடைவது எமக்கு இலகுவாக இருந்தது.
திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பார்க்கும்போது கெஹெல்பத்தர பத்மே என்பவர் பொலிஸாருக்கு சவாலாக இருந்தார். பொலிஸ் திணைக்களத்துக்கு அவரை கைது செய்வது சிரமாகவே இருந்தது.
ஆனால் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர்களை கைது செய்ய முடிந்துள்ளது.
நாட்டில் உள்ள இந்தோனேசிய தூதரகம் எமக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இதற்கமைய இந்த விசேட சுற்றிவளைப்பு பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாட்டுக்கு அழைத்து வந்து மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment