ஒருசில திடீர் மரண விசாரணை அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதாக முறைப்பாடு : 170 வெற்றிடங்களையும் விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்போம் - நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 29, 2025

ஒருசில திடீர் மரண விசாரணை அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதாக முறைப்பாடு : 170 வெற்றிடங்களையும் விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்போம் - நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம்)

திடீர் மரண விசாரணை அதிகாரிகள் தங்களின் தொழில் கெளரவத்துடன் மற்றவர்களின் மதம் மற்றும் கலாசாரத்தின் பெறுமதி பாதுகாக்கப்படும் வகையில் செயற்பட வேண்டும். இலஞ்சமற்ற திடீர் மரண விசாரணை சேவை ஒன்றை ஏற்படுத்துவதற்கான முறை ஒன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் வழக்கு சட்டத்தின் 108ஆம் உறுப்புரையில் நீதி அமைச்சருக்கு சாட்டப்பட்டிருக்கும் அதிகாரங்களின் பிரகாரம், பல மாவட்டங்களிலும் வெற்றிடமாகி இருக்கும் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் 23 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (27) நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், திடீர் மரண விசாரணை சேவையை கெளரவமான சேவையாக கருதி செயற்பட வேண்டும். மக்களின் திட்டல் கேட்காத எந்த சேவையும் இந்த நாட்டில் இல்லை. வீண் விரயம். மோசடி மற்றும் ஊழல், மக்களின் உணர்வுகளுக்கு செவிசாய்க்காமல் இருப்பது இதற்கு காரணமாகும்.

மீண்டும் இந்த நாட்டின் நீதிமன்றத்தி்ன் நம்பிக்கை, சட்டமா அதிபரின் நம்பிக்கை, அமைச்சுக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதற்காக அர்ப்பணிக்க வேண்டி இருக்கிறது. திடீர் மரண விசாரணை அதிகாரி பதவியின் கெளரவத்தை பாதுகாத்துக் கொள்வது உங்களின் பொறுப்பு மற்றும் கடமை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

திடீர் மரண விசாரணை அதிகாரிகளின் சேவைக்கு வழங்கப்படும் பணம் போதுமானதாக இல்லை. அது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம். ஒருசில திடீர் மரண விசாரணை அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுக் கொள்வதாக முறைப்பாடு கிடைத்திருக்கிறது.

ஒருசிலர் தங்களின் உறவினரின் சடலத்தை விரைவாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பணம் வழங்குகின்றனர். ஒருவர் மரணித்தால் அவரின் உறவினர்களின் கவலையை உணர்ந்து செயற்பட வேண்டும். உண்மையான சமூக சேவையாக செயற்படுவதன் மூலம் உங்களின் தொழில் கெளரவத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இலஞ்சம் பெற்றுக் கொள்ளாமல் திடீர் மரண விசாரணை சேவை ஒன்றை ஏற்படுத்துவதற்கு முறை ஒன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். திடீர் மரண விசாரணையாளர்கள் தங்களின் தொழில் கெளரவத்துடன் மற்றவர்களின் மதம் மற்றும் கலாசாரத்தின் பெறுமதி பாதுகாக்கப்படும் வகையில் செயற்பட வேண்டும்.

நாடு பூராகவும் 170 திடீர் மரண விசாரணை அதிகாரிகள் பதவி வெற்றிடமாகி உள்ளது. அந்த வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இந்த நாடு அரசியல்வாதிகளுக்கு உரித்தான நாடு அல்ல. இந்த நாடு மக்களுக்கே உரித்தானது. அதனால் தங்களின் சேவையை உணர்வுடன் மேற்கொள்ளும்போது முறையான சேவையை வழங்க முடியுமாகிறது. பிரதி உபகாரங்கள் இல்லாமல் மக்கள் சேவையாக திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொள்ளும் சேவையை மதிக்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment