மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான், வாகரை பிரதேச செயலக்கப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாகாண நீர்ப்பாசனத்திற்குச் சொந்தமானதும், ஏனைய வன வளத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் இரவு 7.00 மணி தொடக்கம் அதிகாலை 5.00 மணி வரை பொலிசார் பாதுகாப்பு படையினரின் அனுசரணையுடன் மணல் கொள்ளை இடம்பெறுவதை புதிய அரசுக்குத் தெரியாதா? அதனை நிறுத்த முடியாதா? என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெத்தினம் (ஈ.பி.ஆர்.எல்.எப்) புதன்கிழமை (27) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
போரதீவுப்பற்று (வெல்லாவெளி), மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை), மண்முனை மேற்கு (வவுணதீவு), ஏறாவூர்ப்பற்று (செங்கலடி), கோறளைப்பற்று தெற்கு (கிரான்), கோறளைப்பற்று வடக்கு (வாகரை) போன்ற பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மத்திய, மாகாண நீர்ப்பாசனத்திற்குச் சொந்தமானதும், ஏனைய வன வளத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் மணல் கொள்ளை இடம்பெறுகின்றது.
இரவு ஏழு மணி தொடக்கம் அதிகாலை ஐந்து மணி வரையும் மணல் மாபியாக்களால் முப்பதிற்கு மேற்பட்ட நீரோடைகள், வாய்க்கால்கள், தாய் ஆறுகள் ஊடாக வரும் கிளை வாய்க்கால்கள், ஓடைகள் போன்றவற்றில் சராசரியாக நாள் ஒன்றிற்கு முண்ணூறுக்கு மேற்பட்ட கனரக வாகனங்களில் தவறான முறையில் மணல் ஏற்றப்பட்டு மணல் லோடுகள் சில மணல் சேகரித்து வைக்கப்படும் யாட்டுக்களில் குவிக்கப்படுகின்றன.
இச்செயல் அண்ணளவாக இருபதிற்கு மேற்பட்டவர்களின் தலைலமையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு ஒரு சில பொலிசாரும் உடந்தையாக மணல் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் பலர் ஒரு சில பாதுகாப்பு பிரிவினருடன் தொடர்பை வைத்துக் கொண்டு கப்பம் வழங்கி மணல் திருட்டு வேலைகளில் பல வருட காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கோ அல்லது வன வளத் திணைக்களத்திற்கோ தெரியாதா? புதிய அரசின் கையாலாகாத சட்ட ஒழுங்கை அமுல்படுத்த முடியாத பலவீனத்தைக் காட்டும் செயல் அல்லவா. எனவே இது தொடர்ந்தால் மாவட்டத்தின் இயற்றை சூழலும், ஏனைய சுற்றுச் சூழலும், பாதிக்கப்பட்டு பாரிய வெள்ள அனர்த்தமும் ஏற்படும். இது புதிய அரசுக்குத் தெரியாதா? என அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டடியுள்ளார்.
No comments:
Post a Comment