பொதுப் போக்கு வரத்து சேவைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி காலை வேளையில் மல்லியப்பு சந்தி அருகில் இடம்பெற்ற பஸ் விபத்து உங்களில் எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கிறது....? பல உயிரிழப்புகள், கை கால்கள் முறிந்த, உடைந்த நிலையில் எட்டு ஒன்பது மாதங்கள் கடந்தும் கூட பலர் இன்றுவரை வைத்தியசாலை வீடு என்று சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் என்றாவது நினைத்து பார்த்ததுண்டா....?
அதன் பின்னர் மே மாதம் இடம்பெற்ற கெரண்டி எல்ல விபத்து. இரண்டு நாட்களுக்கு முன்னர் குளியாப்பிட்டியவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வாகன விபத்து என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
ஓர் விபத்து நடந்துவிட்டால், உயிர்ச்சேதங்கள் பதிவாகி நாடளாவிய ரீதியில் செய்தியாகிவிட்டால் மாத்திரம் ஓரிரண்டு கிழமைகளுக்கோ, மாதங்களுக்கோ நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகள், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அதன் பின்னர் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகிவிடுகிறது. அப்படியே இலைமறை காயாகி விடுகிறது.
அடுத்து இன்னொரு விபத்து நடக்கும் வரையில் அனைத்து செயற்பாடுகளும் பாழுங்கிணறுகளாகி விடுகிறது. அதன் பின்னர் இன்னொரு அசம்பாவிதத்தின் பின்னர் மீண்டும் தூர்வாரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. சமகால பிரச்சினைகளுக்கு சிறிது நாட்களில் மறந்துவிடுவோம் என்பதே தீர்வாக, மருந்தாக அமைந்துவிட்டது.
தனியார் மட்டுமல்ல மலையகத்தில் அரச போக்குவரத்து சேவைகளது நிலையும் அப்படித்தான் இருக்கிறது. இதனை நான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை, தினந்தோறும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் ஊரறிந்த உண்மை இது. விசேடமாக மலையகத்தின் பிரதான நகரம் முதல் தோட்டங்கள் தோறும் வாழும் அனைவருக்கும் தெரிந்த விடயம் இது.
இதனால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் ஆசிரியர்கள், தினமும் தொழிலுக்கு செல்வோர், வைத்தியசாலைகளுக்கு செல்வோர் என பெருமளவிலானோர் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்பது மிகமிக வேதனையான விடயம்.
பண்டிகைக் காலங்களில் டிப்போக்கள் வெளியிடும் வருமான அறிக்கைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கோடி கோடியாக வருமானம் ஈட்டினோம் என்பதை ஊடக சந்திப்புக்களினூடாக வெளிப்படுத்தும் டிப்போக்கள் பஸ் தரிப்பிடங்களின் பராமரிப்பு தொடர்பிலோ தினந்தோறும் மக்களை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டிகளின் பராமரிப்பு தொடர்பிலோ தக்க கவனம் செலுத்தாமை மிகவும் கண்டனத்துக்குறியது.
தனியார் எனும்போது நிலமை இன்னும் மோசமாக இருக்கிறது, தொழில் போட்டி, அதிகரித்திருக்கும் உதிரிப்பாகங்களின் விலைகள் என்பவற்றுடன் அதிக பராமரிப்பு செலவுகளுடன் தொழிலை நடாத்த முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
அரசாங்கம் இது தொடர்பில் விசேட கவனம் எடுத்து மானியங்கள் வழங்கியாவது அதுவும் குறிப்பாக மலையகத்தில் இயங்கும் இந்த தனியார் போக்குவரத்து சேவை வழங்குனர்களை ஊக்குவிக்க முன்வர வேண்டும்.
அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் மலையகத்தை இன்னும் உற்று நோக்குங்கள். மக்களின் வாக்குகளால் வெறுமனே பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரிப்பது மட்டும் அல்ல, இன்றைய அரசியல் உரிமை, அரசியல் செயற்பாடுகளை வாக்குறுதிகளாக எழுத்துக்களுக்கும் செய்திகளுக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தி விடாமல் மலையக மக்கள் தொடர்பில் இன்னும் அதீத கவனம் எடுங்கள்.
தேயிலை வேண்டுமென்றால், உல்லாச பிரயாணிகளின் வருகையால் டொலர் வருமானம் அதிகரிக்கும் என்ற வியாபார நோக்கத்திற்கு அப்பால் இங்குள்ள மனிதர்களும் உயிர்களே, அவர்களும் இந்த மண்ணில் வாழ பிறந்தவர்களே என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
மக்களுக்காக உருவாகிய அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசாங்கம் என்ற ரீதியில், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் மக்களுக்காக இந்த அரசாங்கத்தின் கண்கள் திறக்கும் என நான் எண்ணுகிறேன் என்றார்.
No comments:
Post a Comment