(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் நிர்வாகத்தில் பாரியளவிலான இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செல்லும்போது அவர்களுக்கான சேவை வழங்கல் தாமதப்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இலஞ்சம் கோரப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.
மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் குறித்து தெளிவை வழங்கும் மற்றும் நேர்மைப் பண்பை ஊக்குவிக்கும் நேர்மையான தேசத்தை நோக்கி' தேசிய நிகழ்ச்சித் தொடரின் முதலாவது நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஊழல்வாதிகளை பிடித்து அவர்களை சிறைக்கு அனுப்பினால் மாத்திரம் ஊழலை இல்லாதொழிக்க முடியாது. பிரச்சினை எங்குள்ளது என்பதை விளங்கிக் கொண்டுள்ளோம்.
முழு நாட்டிலும் குறிப்பாக அரச சேவை மற்றும் அரச நிறுவனங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் என்பது புற்றுநோய்போல் தீவிரமாக பரவியுள்ளது. ஆணைக்குழுவின் பணிப்பாளராக பதிவியேற்றதன் பின்னரே அதன் பாரதூரத்தை விளங்கிக் கொண்டேன்.
நாட்டு மக்கள் அனைவரும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக குரலெழுப்புகிறார்கள். இருப்பினும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள்தான் ஊழலுடன் உள்ளார்கள் என்பதையும் அடையாளப்படுத்திக் கொண்டோம்.
முறைமை மாற்றம் என்று குறிப்பிட்டாலும் முறைமை தமது கைகளுக்கு வந்ததன் பின்னர் கூரையின் மீது ஏறுவதாக பிரதி அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதுவே நான் புரிந்து கொண்ட உண்மை.
ஊழல் பற்றி அனைவரும் பேசினாலும் தம்மிடம் வந்ததன் பின்னர் தன்னை தவிர்த்து ஏனையவர்களை பிடிக்குமாறு குறிப்பிடுகிறார்கள். ஊழல்வாதிகளை கைது செய்து சிறைக்கு அனுப்புவது மாத்திரமல்ல அதற்கு அப்பாற்பட்டு கல்வி முறைமையிலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஒன்றுபடுமாறு ஒட்டு மொத்த மக்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். எமக்கு பொறுப்புக்களை வழங்கியதன் பின்னர் தமக்கு எவ்வித பொறுப்புமில்லை என்று மக்கள் கருதுகிறார்கள்.
ஊழலுக்கு எதிராக செயற்படுவது ஒட்டு மொத்த மக்களின் சமூக பணி என்று குறிப்பிடும் பொறுப்பு எமக்கு உண்டு.
உள்ளூராட்சி சபை நிர்வாகத்தில் பாரியளவிலான இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செல்லும்போது அவர்களுக்கான சேவை வழங்கல் தாமதப்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இலஞ்சம் கோரப்படுகிறது. இவற்றை அடையாளப்படுத்தியுள்ளோம்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் ஊழலற்ற நிர்வாக கட்டமைப்பை உள்ளூராட்சி மன்றங்களில் அவர்கள் ஏற்படுத்த வேண்டும். அது அவர்களின் பொறுப்பு. அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை தவறாக வழித்துவதும் இடம்பெறும். இதனை மக்கள் பிரதிநிதிகள் சிலநேரம் அறியாமல் இருக்கலாம்.
ஆகவே சகல உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் தெளிவூட்டப்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment