(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாங்கள் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் கொண்டுவந்த மலையக அதிகார சபையின் அதிகாரங்களை அமைச்சுக்கு கீழ் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதனை செய்ய வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் ஹட்டன் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்ட எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் அதனை ஆரம்பித்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாங்கள் அரசியல் ரீதியில் வேறுபட்டு அரசியல் செய்தாலும் இலங்கையர்களாக ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். அதற்கான சூழல் தற்போது மலந்துள்ளது. அதனால் அதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்து, அது தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
அரசாங்கம் வாக்குறுதியளித்த புதிய அரசியலமைப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும். அதேபோன்று மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிட வேண்டும். அதேபோன்று கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பல பரிந்துரைகள் இருக்கின்றன. அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார, காணி, விட்டு உரிமை தொடர்பில் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். அந்த விடயங்களை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் காணக்கூடியதாக இல்லை.
நாங்கள் மலையகத்தில் பிரதேச சபைகளை கொண்டுவந்தோம். காணி உரிமைகளை பெற்றுக் கொடுத்தோம். வீடுகளை கட்டிக் கொடுத்தோம். இந்தியாவுடன் கலந்துரையாடி 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை கொண்டுவந்தோம். தனி வீட்டுத் திட்டம் என இவ்வாறு பல விடயங்களை செய்திருக்கிறோம். நாங்கள் முற்போக்கானவர்கள். எங்களை பிற்போக்கானவர்களுடன் சேர்த்து பார்க்க வேண்டாம்.
1977 க்கு பின்னரே பெருந்தோட்ட பாடசாலைகள் தேசிய கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்டன. அதனால் பல குறைபாடுகள் அங்கு காணப்படுகின்றன. அதனால் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும்போது பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்த பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இலவச கல்வியை அறிமுகப்படுத்தியது சி.டபிள்யூ. டபிள்யூ. கண்ணங்கரவாக இருக்கலாம். அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர் மலையக மக்களின் கல்விக்கு எதனையும் செய்யவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன்.
மக்கள் விடுதலை முன்னணி 2023.10.15ஆம் திகதி ஹட்டன் பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் தெரிவிக்கப்பட்ட எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக காணி, வீட்டுரிமை, அரசாங்க சேவையை இலகுவாக பெற்றுக் கொள்ளல், கல்வி, சுகாதாரம். என பல விடயங்கள் இனம் காணப்பட்டிருந்தன. ஆனால் இவை எதுவுவே இந்த ஒரு வருட காலத்தில் முன்னெடுக்கப்படவில்லை.
ஒரு வருட காலத்தில் எதனையும் செய்ய முடியாது என எங்களுக்கு தெரியும். ஆனால் குறைந்தபட்சம் இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பித்து நம்பிக்கையை ஏற்படுத்தலாம். அதனை செய்யவில்லை.
இந்திய அரசாங்கத்தின் உதவியில் பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை கட்டுவதற்கான கேள்வி கோரல் தொடர்பான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கமே முன்னெடுக்கிறது. அதில் தவறுகள் இருந்தால், இந்திய அரசாங்கத்திடம் கேளுங்கள். அதனால் இவ்வாறான விடயங்களை தெரிவித்து, தாமதவாதற்கு காரணம் தெரிவிக்க வேண்டாம்.
இந்த வருடத்துக்குள் மலையக மக்களுக்கு 5 ஆயிரம் தனி வீடுகளை கட்டி முடிப்பதாக அமைச்சர் சமன்த வித்தியாரத்ன தெரிவித்திருந்தார். அதனை அவர் செய்வார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
பின்தங்கிய நிலையில் இருந்த மலையக மக்களின் பல அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றே நாங்கள் அரசாங்கத்துக்கு தெரிவிக்கிறோம்.
மஸ்கெலிய வைத்தியசாலையையும், பெங்கட் டிக்கோயா வைத்தியசாலையையும் ஒன்றிணைத்து ஒரே கட்டமைப்பில் செயற்படுத்தும்போது மஸ்கெலியா வைத்தியசாலையில் பல வளங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து மேற்கொள்ள வேண்டும்.
அதேநேரம் மலையக அதிகார சபையில் கை வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அது பிரச்சினையாகிவிடும். 2018 இல் மலையக அதிகார சபையை மிகவும் கஷ்டப்பட்டே நாங்கள் கொண்டுவந்தோம். ஆனால் தற்போது அந்த சபை இல்லாமலாக்கப்பட்டு, அமைச்சுக்கு கீழ் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment