(எம்.வை.எம்.சியாம்)
அண்மைய நாட்களாக நாட்டில் ஊழல், மோசடி ஊறிப்போயுள்ளது. குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக மாத்திரம் ஊழலை நிறுத்த முடியாது. முதலில் மனப்பான்மை ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும். தமக்கு உரிமை இல்லாத ஒன்றை வழங்கும்போது அதனை நிராகரிக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும். அரச அதிகாரிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டும். அரசியல்வாதிகள் கூறும் தவறான தீர்மானங்களை நிறைவேற்றாத அரச சேவை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை மன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஊழல் மோசடி காரணமாக எமது நாட்டுக்கு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம். நாட்டு மக்கள் ஊழல், மோசடியை நிறுத்த வேண்டும் எனக்கூறுகிறார்கள். ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் இதனை செய்யவில்லை? இந்த நாட்டு பிரஜைகளே அதை செய்தனர். ஊழல்வாதிகளை கைது செய்யுங்கள் எனும் கூட்டத்துக்குள்ளேயே ஊழல்வாதிகள் இருக்கிறார்கள்.
ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டி ஏற்பட்டால் இந்த நாட்டில் அநேகமானவர்கள் கைது செய்யப்படுவார்கள். ஆனால் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக மாத்திரம் ஊழலை இல்லாமல் செய்ய முடியாது. முதலில் மனப்பான்மை ரீதியான மாற்றம் கட்டாயமாக ஏற்பட வேண்டும்.
அண்மையில் மோட்டார் வாகன திணைக்களத்துக்கு எமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் சென்று சோதனையிட்டபோது பிரதி ஆணையாளரிடமிருந்து 41 இலட்சத்துக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் எமக்கு முன்னதாக தகவல் கிடைத்திருந்தது. அந்த 41 இலட்சம் ரூபா என்பது ஒரு கிழமைக்கான வசூல் மாத்திரமேயாகும். இறுதியில் அந்த பணத்தை அந்த அதிகாரிகளே தமக்கிடையில் பங்கிட்டுக் கொள்கின்றனர். இது தொடர்பிலான சாட்சியங்கள் எம்மிடம் உள்ளது.
சில அரச திணைக்களங்கள் உள்ளன. அங்கு சேவை ஒன்றை பெற்றுக் கொள்ள பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் அங்குள்ள அரச அதிகாரிகளால் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அந்த கட்டணத்தை செலுத்தினால் மாத்திரமே உரிய வேலை நடக்கும் என மக்கள் நம்புகிறார்கள். அது இலஞ்சம் இல்லை எனும் அளவுக்கு சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இந்த நாட்டில் இலஞ்சமும் ஊழலும் எந்தளவு வியாபித்துள்ளது என்பதை தெளிவுபடுத்தவே இதனை நான் கூறுகிறேன்.
இந்த காலப்பகுதியில் பல அரச அதிகாரிகள் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பதவிலிருந்த அரசாங்கங்கள் எடுத்த கொள்கை ரீதியான தீர்மானங்கள் காரணமாக இவர்கள் கைது செய்யப்படுவதாக கூறலாம். அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் சட்டரீதியானது அல்ல. அங்கு ஊழல் இடம்பெற்றால் அது சட்டரீதியானதாக அமையாது.
உதாரணமாக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிராக சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உரக் கொள்வனவு தொடர்பில் வழக்கு உள்ளது. அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாக 6.9 மில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதன் ஊடாக எமக்கு தற்போது குழப்பம் ஏற்படலாம். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாம் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சம் அரச அதிகாரிகளுக்கு ஏற்படலாம். நான் உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன். நேர்மையாக செய்யும் எந்தவிடயமும் இதில் உள்ளடங்காது.
அரச அதிகாரிகளிடத்தில் மாற்றிக் கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் உள்ளன. அரசியல்வாதிகள் கூறும் தவறான தீர்மானங்களை நிறைவேற்றாத அரச சேவை கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதற்கு முன்னர் இது நடந்தது கிடையாது. இனியும் நடக்குமா என்பதும் எமக்கு தெரியாது.
அரச அதிகாரிகளை விட அரசியல்வாதிகள Smart ஆக செயற்படக்கூடியவர்கள். எனவே அரச அதிகாரிகள் மனசாட்சிக்கு ஏற்ப நேர்மையாக பணியாற்றுங்கள். சட்டத்துக்குட்பட்டு செயற்படுவதே பாதுகாப்பானதாகும் என்றார்.
No comments:
Post a Comment