மிக முக்கிய தூணாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமையும்: சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, July 6, 2025

மிக முக்கிய தூணாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமையும்: சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டு

(நா.தனுஜா)

நாட்டின் அரச நிதியை வலுப்படுத்துவதற்கும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்வதற்குமான முயற்சிகள் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணை அளிக்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டத்தின் மிக முக்கிய தூணாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் அமையும் என இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டம் குறித்த 4 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், அதற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது. அதனையடுத்து கடந்த வியாழன்று வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து வெளியிட்டபோதே எவான் பபஜோர்ஜியோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டத்தின் மிக முக்கியமான அங்கமாகும். அச்செயற்திட்டத்தின் பிரகாரமும், அரசாங்கத்தின் இலக்குகளுக்கு அமைவாகவும் வருமானம், செலவினங்கள் உள்ளிட்ட சகல கூறுகளும் உரியவாறு அடையப்படுவதை நாம் உறுதிசெய்வோம் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை ஆட்சியியல் மறுசீரமைப்புக்கள், நாணயக் கொள்கை மற்றும் கையிருப்பு முகாமைத்துவம் என்பவற்றில் முன்னெடுக்கப்பட வேண்டிய சில முக்கிய விடயங்கள் காணப்படுவதாகவும், அது குறித்து இலங்கையுடன் கலந்துரையாடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்களின் மறுசீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment